பீகாரில் அரசுப் பணியாளர் தேர்வுக்கான கேள்வித் தாளை கசியவிட்ட அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சுதிர் குமார் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிஎஸ்எஸ்சி எனப்படும் பீகார் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம், அம்மாநில அளவில் பல்வேறு அரசுப் பணியாளர் தேர்வுகள் மற்றும் நியமனத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மாநில அரசில் குமாஸ்தா (கிளார்க்கு) பணிக்கான 13,120 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை பீகார் பணியாளர் தேர்வாணையம் நடத்த அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்காக, 18.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் தேர்வுக்கு முன்கூட்டியே வினாத்தாள் வாட்ஸ் அப்பில் கசிந்துவிட்டதாக புகார்கள் எழுந்ததையடுத்து அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்துக்கும் தேர்வாணையத்தின் தலைவர் சுதிர் குமாருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பீகார் மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் சில அரசியல் உள்நோக்கம் காரணமாக, சுதிர் குமார் மீது போலியான புகார் கூறப்படுகிறது. விரைவில் உண்மை தெரியவரும் என பீகார் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லல்லு பிரசாத் யாதவ், சுதிர் குமார் நேர்மையான மற்றும் கடினமாக உழைக்கும் ஒரு அதிகாரி எனவும்,போலீஸார் விசாரணையில் உண்மை வெளிவரும் என தெரிவித்துள்ளார்.