மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

பழனிச்சாமி அரசு கலைக்கப்படலாம்: காங்கிரஸ்!

பழனிச்சாமி அரசு கலைக்கப்படலாம்: காங்கிரஸ்!

முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அரசு, தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு இல்லை. இந்த அரசு எந்தநேரமும் கலைக்கப்படலாம் என்று, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறியுள்ளார்.

தமிழக அரசு நிலவரம் குறித்து காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது நன்செய், புன்செய் நிலங்களுக்கு தனித்தனியாக வறட்சி நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறினார். அப்போது நான், இழப்பீடு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்தேன். இது முடிவு செய்யப்பட்டுவிட்டது. மாற்ற இயலாது என அவர் தெரிவித்தார். ஆனால் இப்போதைய முதல்வர் மத்திய அரசு வழங்கியுள்ள அரசாணையின்படிதான் இழப்பீட்டுத் தொகை வழங்க முடியும் என்று கூறுகிறார். பன்னீர்செல்வம் கூறியதிலிருந்து முற்றிலும் மாறுதலான நிலைப்பாட்டை அரசு எடுத்திருக்கிறது. இது விவசாயிகளை ஏமாற்றும் முயற்சியாகும்.

தமிழகத்தில் அதிமுக அரசு அமைந்து 7 மாதங்களாகிவிட்டன. குடும்ப அட்டைகளுக்கான பொருள்கள் உள்பட எந்த நலத் திட்டங்களையும் சரிவர செயல்படுத்த முடியவில்லை. இருப்பினும் ஆட்சியாளர்கள் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். அரசின் நிதிநிலை திவாலாகும் நிலையில் உள்ளது. இதை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன் எனத் தெரியவில்லை. விவசாய உற்பத்தியை பெருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும். தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி அரசு எந்த நேரமும் கலைக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon