மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 24 பிப் 2020

ஆளுநரின் மலரும் நினைவுகள்!

ஆளுநரின் மலரும் நினைவுகள்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரைக் காணவந்த மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி என யாரும் ஜெயலலிதாவை சந்தித்தாகத் தெரியவில்லை. மருத்துவனையிலே தவம் கிடந்த அதிமுக அமைச்சர்கள்கூட யாரும் சந்தித்ததாகத் தெரியவில்லை. ஜெயலலிதா வகித்துவந்த பொறுப்புகளை நிர்வகித்து வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களில் ஒருநாள் கூட நான் அவரைச் சந்திக்கவில்லை” என்று பகிரங்கமாகக் கூறியிருந்தார். தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவும் அப்பல்லோ மருத்துவனைக்கு பலமுறை வந்து சென்றார். அவரும் ஜெயலலிதாவை சந்தித்தாரா, இல்லையா என்பது குறித்து பெரும் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்குமுன் அப்பல்லோ மருத்துவனை நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், “ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜெயலலிதாவை சந்தித்தார். ஜெயலலிதா விரல் உயர்த்தி நலமாக இருப்பதாகத் தெரிவித்தார்” என்று கூறப்பட்டது. ஆனால் அப்போதும் எதுவும் கூறாமல் அமைதிகாத்து வந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். இந்நிலையில், இந்தக் குழப்பத்திற்கு விடையளித்துள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். ஆம், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது தாம் அவரை ஒருமுறை சந்தித்ததாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக http://www.dailyo.in இணையதளத்தில் ஆளுநர் வித்யாசாகர் எழுதியுள்ள கட்டுரையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை பார்க்க சிலமுறை சென்றேன். அப்படிச் சென்றபோது ஒருமுறை மட்டும் என்னைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தி தாம் குணமடைந்து வருவதை உணர்த்தினார் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரையில் தம்முடைய இளம்பிராயம், குடும்ப உறுப்பினர்கள், எமர்ஜென்சியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது உள்ளிட்டவற்றையும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் விவரித்திருக்கிறார். 1980களில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வாக தமது அண்ணனும் பாஜக எம்.எல்.ஏ.வாக தாமும் சட்டசபையில் மோதிக்கொண்ட சுவாரசிய சம்பவங்களையும் இந்த கட்டுரையில் வித்யாசாகர் பதிவு செய்துள்ளார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon