கோவை ஈஷா யோகா மைய நிகழ்ச்சிக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மதியம் கோவை வந்தார். அப்போது பிரதமரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை, தமிழக அரசிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிவாரண நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி பேசினாரா ? என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது, வர்தா புயல் மற்றும் விவசாயிகளை கடுமையாக பாதித்த வறட்சி என கடுமையான சூழலை தமிழகம் சந்தித்தது. அப்போது ‘வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கு ரூ. 22,573 கோடி தேவை. இந்த தொகையை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். உடனடி நிவாரணமாக ரூ. 1000 கோடியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்’ என்று முதல்வர் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். மேலும், தமிழக மக்களின் முக்கிய பிரச்னைகள் தொடர்பான 29 விஷயங்களை முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமரிடம் கோரிக்கையாக வைத்தார். இதேபோல், தமிழக வறட்சி நிவாரணம் கோரி தமிழக அரசின் மனுவுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதமும் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பை சமாளிக்க நிவாரண நிதியாக 39,565 கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 1000 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வறட்சி பாதித்த பகுதிகளை மத்திய அரசு குழுவை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக நேற்று பிரதமரை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின்போது மேற்கண்ட நிவாரண நிதிகள் மற்றும் ஏனைய தமிழக பிரச்னைகள் குறித்து பேசினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதுகுறித்து முதல்வர் பிரதமரிடம் பேசியதாக செய்தியாளர்களிடம் முதல்வர் கூறவில்லை. நேற்று பிரதமரை சந்தித்த பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியது இதுதான்.
‘கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் பயன்பெறும்வகையில், ரூ.3,523 கோடியில் அறிவிக்கப்பட்ட அவினாசி - அத்திக்கடவு திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் திட்டம் செயல்படுத்தப்படும். ஹைட்ரோ கார்பன் திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். இருப்பினும் விவசாயிகள் பாதிக்கப்படும்போது, தமிழக அரசு அவர்களுக்கான பாதுகாப்பையும், நன்மையையும் வழங்கும்’ என்றார். இந்நிலையில், நாளை மறுநாள் டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 27ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமருடனான சந்திப்பின்போது தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே உள்ளிட்ட திட்டங்கள், வர்தா புயல் நிவாரணம், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை எடப்பாடி முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் பெரும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் நிவாரண நிதியை தமிழகத்திற்கு முதல்வர் பெற்றுத்தருவது அவரது கடமை.