மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

சிறிசேனா மீது தமிழர்கள் அதிருப்தி : எதிர்க்கட்சி ஆதரவு!

சிறிசேனா மீது தமிழர்கள் அதிருப்தி : எதிர்க்கட்சி ஆதரவு!

இலங்கையில் ராணுவப் பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட தமிழர்களின் நிலங்களை உடனடியாக அதற்குரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று, இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் வலியுறுத்தினார்.

இதுகுறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது, ‘ராணுவப் பயன்பாடு என்ற பெயரில் வடக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழர்களின் நிலங்களை இலங்கை அரசு கையகப்படுத்தியது. இதனால் தங்களின் பூர்வீக நிலங்கள் பறிபோன கவலையில் தமிழர்கள் இருக்கின்றனர். நாட்டில் புதிய அரசு அமைந்தவுடன், அந்த நிலங்கள் யாவும் அதற்குரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. நிலங்கள் திரும்ப வழங்கப்படாததால் அதிபர் சிறிசேனா தலைமையிலான அரசு மீது தமிழர்கள் மிகுந்த மனக்கசப்பில் உள்ளனர் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். இந்த விவகாரத்தில் அரசின் அணுகுமுறையானது, தனிப்பட்ட முறையில் என்னையும் கவலையடையச் செய்துள்ளது என்பதையும் வெளிப்படையாகத் தெரிவிக்கிறேன். இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தமிழர்களின் மனநிலையை இந்த அரசு புரிந்துகொள்ள வேண்டும். அதிபர் புரிந்துகொள்ள வேண்டும்.

எங்களின் நிலங்கள் எங்களுக்கு திரும்ப வழங்கப்பட வேண்டும். அது எங்களின் உரிமை. எங்கள் உரிமையை நீங்கள் பறிக்க முடியாது. இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடன் இருக்க வேண்டுமெனில், எங்களுக்கு தன்னாட்சி வழங்கப்பட வேண்டும். இதற்காக நீண்டகாலமாக நாங்கள் போராடி வருகிறோம்.

தமிழர்களின் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமாக நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்று அண்டை நாடான இந்தியாவும், அதன் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைதந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இதை வலியுறுத்திப் பேசினார். இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் தெளிவாகத் தெரிவித்துவிட்டார். அதைக் காட்டிலும் நீங்கள் வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள்?’ என சம்பந்தன் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்து, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா பேசியதாவது: ‘ராணுவம் கையகப்படுத்திய தமிழர்களின் நிலங்கள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தற்போது வரை சுமார் 2,400 ஏக்கர் நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்னும் சுமார் 4,100 ஏக்கர் நிலங்களை வழங்க வேண்டியுள்ளது’ என்று தெரிவித்தார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon