மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

பதவி விலகி ஜெயித்துக் காட்டட்டும் : திண்டுக்கல் சீனிவாசன்

பதவி விலகி ஜெயித்துக் காட்டட்டும் : திண்டுக்கல் சீனிவாசன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் சீனிவாசன், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஆட்சியை கவிழ்கத் திட்டம் தீட்டியதோடு ஸ்டாலினை முதலமைச்சராக்க நினைத்தார் என்றும் பேசினார்.

திண்டுக்கல் கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் பேசியபோது கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக தனது நிலையான ஆட்சியை தொடர்ந்து வழங்க பாடுபட்டு வருகிறது. ஆனால் கட்சியில் இருந்து பிரிந்துசென்ற ஓ.பன்னீர்செல்வம் சில எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என நினைக்கிறார். ஜெயலலிதா மறைவின்போது சசிகலா ஆலோசனையின்பேரில் தான் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகத் தேர்வாகி பதவியேற்றார். ஆனால் அவர் பதவியேற்ற பிறகு நடந்த நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் தான்தான் காரணம் என்பதைப்போல பெருமை பேசி வந்தார். குறிப்பாக, ஜல்லிக்கட்டு பிரச்னை தன்னால்தான் தீர்த்துவைக்கப்பட்டது என சுய விளம்பரம் தேடினார்.

ஜல்லிக்கட்டு பிரச்னையின்போது மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சசிகலாதான் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இப்பிரச்னையை தீர்க்கக் கோரியும் நிரந்தரச் சட்டத்தை அரசிதழில் வெளியிடவும் வற்புறுத்தினார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து விலகி தன்னுடன் 30 எம்.எல்.ஏ.,க்கள் வந்துவிட்டால் அதிமுக ஆட்சியை கலைத்துவிடலாம் என நினைத்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் கூட்டுச் சேர்ந்து அவரை முதலமைச்சராக்கவும் நினைத்தார். அதிமுக தொண்டன் யாரும் திமுக-வுடன் கூட்டணி வைப்பதை விரும்பமாட்டார்கள். அதன்படிதான் தற்போது உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். கட்சியை விட்டு விலகியவர்கள் உண்மையிலேயே பதவிக்காக விலகவில்லை என்றால் தங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும்.

ஜெயலலிதா, சசிகலா மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக-தான். இதேபோல, ஜெயலலிதா மீது 12 வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதில் 11 வழக்குகளில் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கிலும் ஜெயலலிதா விடுதலையாகியிருப்பார். ஆனால் அரசியல் விரோதிகளின் சூழ்ச்சியால் தற்போது சசிகலா சிறைக்குச் சென்றுள்ளார்.

இந்த வழக்கில் நாங்கள் அடுத்து செய்யவேண்டிய பணிகள், அவரை விடுவிக்க சாத்தியமான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் பேசினார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon