மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

துரோகம் வெற்றி பெற்றதில்லை : அமைச்சர் தங்கமணி

துரோகம் வெற்றி பெற்றதில்லை : அமைச்சர் தங்கமணி

தலைவருக்கான தகுதி ஸ்டாலினிடம் இல்லை என குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் பி.தங்கமணி, கட்சிக்குள் துரோகம் செய்தவர்கள் எப்போதும் வெற்றி பெற்றதில்லை என்று கூறினார்.

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சருமான பி.தங்கமணி கலந்துகொண்டு பேசியபோது அவர் கூறியதாவது: திருமணத்தின்போது சீப்பை மறைத்து வைத்துவிட்டால் திருமணம் நின்று போய்விடும் என்று சிலர் மனக்கணக்கு போடுகின்றனர். எப்படிப்பட்ட சோதனையான காலத்திலும் இந்த இயக்கத்தை கட்டிக்காத்து வருபவர்கள் தொண்டர்கள். மக்களுக்காக பணியாற்றியவர் ஜெயலிதா. அவர் மறைந்து 75 நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் எத்தனை துரோகங்கள் நிகழ்ந்திருக்கிறது என்பதை இங்குள்ளவர்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். துரோகம் எப்போதும் வெற்றி பெற்றதில்லை. எங்களுக்குள் அதிகாரப் போட்டி என்கிறார்கள். எங்களுக்குள் அதிகாரப் போட்டி இல்லை. சாதாரண எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக வந்துள்ளார் என்றால் அதுதான் இந்த இயக்கத்தின் பெருமை. ஜெயலலிதாவுக்கு எதிரிக் கட்சி திமுக., அவருக்கு எதிரி கருணாநிதி. அதேபோல்தான் நமக்கும் எதிரிக் கட்சி திமுக-தான். எதிரிகள் கருணாநிதியும், ஸ்டாலினும். ஆனால் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக துரோகிகள் துணை போகின்றனர்.

இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்துவிட்டுச் சென்றவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு 2 மாதம் முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் ஏதாவது திட்டத்தை அறிவித்தாரா? ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக பதவியேற்றதும் முதலில் கையெழுத்திட்டதே மதுக்கடைகளை முடுவதற்கான உத்தரவு. 2வது பெண்களுக்கு 50 சதவிகித மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்கான உத்தரவென 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.

இதில் யார் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வாக்காளர் என்ற பெயரில் நான் இறந்துவிட்டதாக (கண்ணீர் அஞ்சலி) சமூக வலைதளங்களில் தகவல் பரப்புகின்றனர். இது நியாயம்தானா? அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. திருஷ்டி போய்விட்டதாகக் கருதுகிறேன். இரட்டை இலைச் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற பி.ஆர்.சுந்தரம் எம்.பி. அந்தச் சின்னத்தை முடக்க மனு கொடுக்கிறார் என்றால் அவர் உண்மையான அதிமுக தொண்டாரா? துரோகம் எப்போதும் வெற்றி பெற்றதில்லை. உண்மையே வெற்றிபெறும். இந்த இயக்கத்தை காப்பாற்ற நாங்கள் கஷ்டப்படுகிறோம். அவர்கள் இரட்டை இலையை முடக்க முயற்சிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் எப்போதும் ஜெயலலிதாவின் கோட்டை என்பதை வருகிற உள்ளாட்சித் தேர்தலில் நிரூபிக்க வேண்டும்.

சட்டமன்றத்தில் 122 பேரும் ஒற்றுமையாக இருந்ததால் ஜெயலலிதாவின் ஆட்சி நீடித்தது. அந்தப் பக்கம் 10 பேர் போயிருந்தால் ஆட்சி கலைந்திருக்கும். அப்படி ஆட்சி கலைந்திருந்தால் திமுக ஆட்சிக்கு வந்துவிடும். அதற்கு நாம் இடம் தரலாமா? திமுக-வினர் சட்டமன்றத்தில் கை கலப்பு வராதா? அதனால் அதிமுக ஆட்சி கலைக்கப்படாதா? என்று நினைத்துச் செயல்பட்டனர். சட்டமன்றத்தில் சபாநாயகரிடம் திமுக-வினர் நடந்துகொண்டவிதத்தை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஆனால் நாங்கள் 122 பேரும் எப்படியாவது ஜெயலலிதாவின் ஆட்சி நீடிக்க வேண்டும், அவர் கொண்டுவந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சட்டமன்றத்தில் அமைதியாக இருந்தோம்.

சட்டமன்றத்தில் ஸ்டாலின் சட்டையை யாரும் கிழிக்கவில்லை. அவரே கிழித்துக்கொண்டு வெளியே வந்து நிருபர்களிடம் காட்டுகிறார். தலைவர் என்றால் ஒரு தகுதி வேண்டும். தலைவருக்கான தகுதி ஸ்டாலினிடம் இல்லை. அவரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் ஜெயலலிதா கொண்டுவந்த எந்த திட்டமும் மக்களுக்கு கிடைக்காது. அப்படிப்பட்டவரிடம் ஆட்சியை ஒப்படைக்கலாமா? ஒரு சொத்துக்காக 6 பேரை வெட்டிக்கொன்ற திமுக-வுக்கு துணை போகலாமா? சட்டமன்றத்தில் திமுக-வினர் நடந்துகொண்டவிதத்தை மறைப்பதற்காக ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறார். ஜனாதிபதி, கவர்னரிடம் மனு கொடுக்கிறார். சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்கிறார்.

ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் இந்த பகுதிக்கு சுற்றுச்சாலை, 4 வழிச்சாலை அமைப்பதற்கு ரூ.320 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.150 கோடியில் நாமக்கல்- திருச்செங்கோடு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. அதேபோல் திருச்செங்கோடு-வேலூர் சாலை ரூ.65 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து அனைத்து வசதிகளையும் கிடைக்கச் செய்வோம். வறட்சி நிவாரணத்திற்காக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.2247 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். அதில் நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இது மக்களாகிய உங்கள் ஆட்சி. இது மக்கள் இயக்கம். அந்த இயக்கத்தை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

சனி, 25 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon