எகிப்து அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த குண்டுப்பெண் இமான் அகமது அப்துல்லாதிக்கு, கடந்த 12 நாட்களில் 50 கிலோ உடல் எடை குறைந்துள்ளது.
இமான் அகமது அப்துல்லாதி விமானம் மூலமாக கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி அலெக்சாண்டிரியாவில் இருந்து சரக்கு விமானம் மூலம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார். பின்னர், அங்கிருந்து சைஃபி மருத்துவமனைக்கு லாரியிலும் பின், சைஃபி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அறைக்கு கிரேன் மூலம் இமான் அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கான சிகிச்சை தொடங்கியபோது அவரின் உடல் எடை 498 கிலோ இருந்தது. அவருக்கு, ஹைபோ தைராய்டு, டயாபடீஸ், ஹைபர் டென்ஷன், சிறுநீகர பிரச்னை மற்றும் உடல் பருமன் ஆகிய பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இமான் அகமதுக்கு முதல் அறுவை சிகிச்சை இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெற உள்ளது. அறுவை சிகிச்சைக்கு முன்பு உடல் எடையை குறைத்தால்தான் அறுவை சிகிச்சை செய்யும் அறைக்குள் செல்ல முடியும். எனவே, மருத்துவர்கள் உடல் பருமனை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கடந்த 12 நாட்களில் 50 கிலோ எடை குறைந்துள்ளார். முன்பு இருந்ததைவிட ஒப்பிடும்போது உடல் பருமன் குறைந்துள்ளது என்பதால் மற்றவர்களின் உதவியுடன் எழுந்து உட்காருமளவுக்கு இமான் முன்னேறியுள்ளார்.