துபாயில் நடக்கவிருக்கும் ஐந்து நாள் உணவுத் திருவிழாவில், இந்தியாவைச் சேர்ந்த 64 உணவுப் பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
உலகின் மிகப்பெரிய உணவுத் திருவிழாவாக கருதப்படும் கல்ஃபுட் (Gulfood) ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 1987ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த உணவுத் திருவிழாவில் சர்வதேச அளவில் சுமார் 120 நாடுகள் பங்கேற்கின்றன. அந்நாடுகளைச் சேர்ந்த முன்னணி உணவு மற்றும் குளிர்பானங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்று தங்களது உணவுப் பொருட்களை காட்சிப்படுத்தி வருகின்றன. இந்த ஆண்டுக்கான கல்ஃபுட் உணவுத் திருவிழா துபாயில் நாளை தொடங்குகிறது.
இதுகுறித்து, துபாயிலுள்ள இந்தியத் தூதரகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘துபாயில் ‘வளைகுடா உணவுத் திருவிழா 2017' ஞாயிற்றுக்கிழமை (26-02-17) தொடங்குகிறது. இந்தத் திருவிழா மார்ச் மாதம் 2ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் இந்த உணவுத் திருவிழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உணவுப் பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்திய அரசின் மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் இந்தியாவைச் சேர்ந்த 64 ஏற்றுமதி நிறுவனங்கள் இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்கின்றன.
உலகளவில், அதிகளவிலான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. இந்தியாவிலிருந்து 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விவசாயப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 2015-16 நிதியாண்டில் இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதியான வேளாண் பொருள்களின் மதிப்பு சுமார் 1,600 கோடி டாலர் ஆகும். இந்தியாவிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பாஸ்மதி அரிசி, பிற அரிசி ரகங்கள், பழங்கள், காய்கறிகள், பால் பொருள்கள், பானங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவை பெருமளவில் ஏற்றுமதியாகின்றன’ என்று, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.