மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

யோகாவை காப்பது நமது கடமை : பிரதமர் மோடி

யோகாவை காப்பது நமது கடமை : பிரதமர் மோடி

யோகாவை காப்பது நமது முக்கிய கடமை. ஜீவாத்மாவை , பரமாத்மாவாக மாற்றுவது யோகாவாகும் என்று வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உள்ள ஆதியோகி சிவன் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

மகா சிவராத்திரியையொட்டி, 112 அடி உயரமுடைய ஆதியோகி சிவனின் முகத்தோற்ற பிரமாண்ட சிலை வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொண்டு சிலையை திறந்து வைப்பதற்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு வந்தார். விமானநிலையத்தில் பிரதமர் மோடியை, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யசாகர்ராவ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர்.பின்னர், அங்கிருந்து 4 விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு பிரதமர், ஆளுநர், முதல்வர் ஆகியோர் சென்றார்கள். அங்கு பிரதமருக்கு பூங்கொத்து கொடுத்து ஜக்கி வாசுதேவ் வரவேற்று, தியான லிங்க மண்டபத்திற்கு பிரதமரை அழைத்துச் சென்றார். அங்கு வழிபாடு நடத்திய பின்னர் சிறிது நேரம் தியான லிங்க மண்டபத்தில் மோடி தியானம் செய்தார். அதற்குப் பிறகு ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் நரேந்திர மோடி ஜோதியை ஏற்றி சிலையை திறந்து வைத்தார். ஆதியோகி புத்தகத்தையும் வெளியிட்டார். பின்னர், பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது கூறுகையில்,

வணக்கம் என்று தமிழில் கூறிய பின்னர், ஆதியோகி சிவன் திறப்பு விழாவில் கலந்துகொள்வதில் பெருமையடைவதாக கூறினார். நல்ல செயலுக்கு வேண்டிய திறனை இறைவன் வழங்குகிறார். யோகாவை காப்பது நமது முக்கிய கடமை. ஜீவாத்மாவை , பரமாத்மாவாக மாற்றுவது யோகாவாகும். நான் என்பதை நாம் என்ற நிலைக்கு அடைய யோகா உதவுகிறது. வேறுபாடுகளை கடந்து பக்தியுடன் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். மந்திரம் வேறுபட்டாலும். சிவன் என்பதே ஆதிமந்திரம்.

இன்று யோகப்பயிற்சி பரவலாக பரவியுள்ளது. கடவுள் எந்த வடிவில் இருந்தாலும் வழிபடுவது நமது பண்பாடு. சிவன், பார்வதி ஒற்றுமை இமயம்- குமரி ஒற்றுமை போன்றது. பழைய சிந்தனைகளை ஆய்வு செய்து புதுப்பித்து கொள்கிறோம். நமது கலாச்சாரத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது. உலகத்திற்கு நன்மையாக யோகாவை இந்தியா வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

விழா முடிந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையம் சென்ற பின்னர் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, பிரதமரின் வருகையையொட்டி கோவையில் இருந்து வெள்ளிங்கிரி மலையடிவாரம் வரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், கோவை நகரமெங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon