மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 6 ஆக 2020

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் : அமித் ஷா

அயோத்தியில் ராமர் கோவில்  கட்டப்படும் : அமித் ஷா

நாடாளுமன்ற தேர்தலின்போது மோடிக்கு நாட்டில் என்ன செல்வாக்கு இருந்ததோ, அதே செல்வாக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது என்று பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் செல்வாக்கு குறித்து பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

மோடி செயல்படுத்தும் திட்டங்களால் மக்கள் முழு ஆதரவு அளித்து வருகிறார்கள். அவர் தங்கத்தை போன்றவர். எப்போதும் ஒளிர்ந்து கொண்டே இருப்பார். மோடி எங்களின் உயர்ந்த தலைவர். பாரதிய ஜனதா கட்சிக்கு அவர் மிகப்பெரிய சொத்து.

மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் உத்தரப்பிரதேச தேர்தலில் பாரதிய ஜனதா அமோக வெற்றிபெறும். அங்கு தொங்கு சட்டசபை அமையும் என்ற பேச்சுக்கே இடமில்லை. பாரதிய ஜனதா 300 இடங்களுக்கு மேல் பிடிக்கும். 4-வது கட்டமாக நடந்த 53 தொகுதிக்கான தேர்தலில் 40 இடங்களுக்கு மேல் பாரதிய ஜனதாவுக்கு கிடைக்கும்.

முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காததால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. நாங்கள் இதற்கு முன்பு பல மாநில தேர்தல்களில் வேட்பாளரை அறிவித்தது இல்லை. ஆனாலும் அங்கு வெற்றி பெற்று இருக்கிறோம். பாரதிய ஜனதா வெற்றி பெற்றதும் அகிலேஷ் யாதவ், மாயாவதியை விட மிகச்சிறந்த நபரை முதலமைச்சராக நாங்கள் தேர்வு செய்வோம். உத்தரப்பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் மாநிலத்தை பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டன. அவர்களுக்கு எதிராக மக்கள் வெகுண்டு எழுந்துள்ளனர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சட்டம்-ஒழுங்கு பாதிப்பில் நாட்டின் முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் இருக்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உத்தரப்பிரதேசத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவோம். தற்போதைய நிலவரப்படி, நாங்கள் ஆட்சியை பிடிப்பது உறுதி. அதே நேரத்தில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கட்சி கூட்டணியை விட மாயாவதி கட்சிக்கு தான் அதிக இடம் கிடைக்கும். விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் அனைவரும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ள நபருக்கு மட்டும் தான் சீட் கொடுத்திருக்கிறோம். ஜாதி, மதம் பார்த்து யாருக்கும் டிக்கெட் வழங்கவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். அரசியல் சட்டத்தை மீறாமல் சட்ட ரீதியாக ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon