மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

திரை விமர்சனம் : எமன் - அழிக்க பிறந்தவன்!

திரை விமர்சனம் : எமன் - அழிக்க பிறந்தவன்!

படத்தின் தொடக்கத்தில் எம்.எல்.ஏ வேட்பாளராக அறிவிக்கப்படும் ஒருவர் துரோகத்தால் வெட்டி சாய்க்கப்படுகிறார். கணவன் இறந்த துக்கத்தில் அவர் மனைவி விஷத்தை தானும் குடித்துவிட்டு தனது கைக்குழந்தைக்கும் கொடுத்து இறக்க, குழந்தை மட்டும் பிழைத்துக் கொள்கிறது. அந்த குழந்தை வளர்ந்து தனது பெற்றோரின் இறப்புக்கு காரணமானவர்களை பழி வாங்க வேண்டும் அல்லவா? அது தானே தமிழ் சினிமாவின் இலக்கணம். ஆம் அந்த வழக்கமான தமிழ் சினிமாவின் பார்முலாவை அப்படியே கடைபிடித்து அதே நேரத்தில் பார்வையாளர்களை கொஞ்சமும் சலிப்படையச் செய்யாமல் அதிரடியான திரைக்கதையுடன் படைத்திருக்கிறார் எமன் திரைப்பட இயக்குநர் ஜீவா சங்கர்.

“இது சகுனிகளும் சாணக்கியங்களும் ஆடுற ஆட்டம்னு அவனுக்கு புரிய வைக்கனும்.” “எதுத்து நின்னு அழிக்கிறத விட கூட நின்னு முடிக்கிறது தான் புத்திசாலிதனம்” என இந்த வசனங்களே படத்தின் உள்ளடக்கத்தை தெளிவாக பேசுகின்றன.

தன் தாத்தாவின் ஆப்ரேஷன் செலவுக்காக செய்யாத குற்றத்துக்காக சிறைக்கு செல்கிறார் விஜய் ஆண்டனி. சிறையில் அந்த சம்பவத்தோடு தொடர்புடைய இரண்டு நபர்களின் பழிவாங்கல் இருப்பதை உணர்கிறார். ஒருவரை ஒருவர் முடிக்கும் வெறியுடன் இருக்க நடுவில் விஜய் ஆண்டனி உள்ளே வர இருவரையும் வீழ்த்திவிட்டு அடுத்த இலக்கை நோக்கி நகருகிறார். அதற்கு விஜய் ஆண்டனிக்கு துணையாக இந்த இருவரின் குருவான தியாகராஜன் வருகிறார், இவர் எதிர்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.

தனது தந்தையை கொன்றவர் அந்த தொகுதி அமைச்சர் தான் எனத் தெரியாமல் அவரை சந்திக்க நேருகிறது. தான் கொன்றவனின் சாயலில் இருக்கும் விஜய் ஆண்டனியை அமைச்சர் அடையாளம் கண்டு கொள்கிறார் . விஜய் ஆண்டனியை கொல்லவும் அவர் திட்டம் போட அத்தனை திட்டத்தையும் முறியடிக்கிறார்.

“அரசியல்ல எதிரி எதிர்ல நிக்க மாட்டான். விசுவாசியா உன் பக்கத்துல நிப்பான்.” “பாலிடிக்ஸ்ல அப்பா மகன்னு வந்துட்டா கூட எதிரி தான்.” என வரும் வசனங்களையெல்லாம் தமிழ் ரசிகர்கள் உணர்ந்து ரசிக்கின்றனர்.

திரைப்பட கதாநாயகி வேடத்தில் வரும் மியா ஜார்ஜின் கதாபாத்திரம் துருத்திக் கொண்டிராமல் திரைக்கதையோடு பின்னப்படுகிறது.

ஏ.சி. பார் தனது கைக்கு வந்ததன் மூலம் அதற்கு ஏற்கனவே போட்டியாக இருக்கும் கவுன்சிலரின் கோபத்துக்கு ஆளாகிறார் விஜய் ஆண்டனி. அவரை எதிர்ப்பதற்காக தங்கள் பகுதியில் சில நல்ல காரியங்கள் செய்ய அதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெறுகிறார். பிரச்சனைகளிலிருந்து விடுபட அரசியல் அதிகாரம் தனது கைக்கு வர வேண்டும் என நினைக்கும் அவர் எம்.எல்.ஏவாக முடிவெடுக்க அது அவ்வளவு நாள் தனக்கு பக்கபலமாக இருந்த தியாகராஜனின் வெறுப்பை பெற்றுத் தருகிறது. அடுத்தடுத்த காட்சிகள் தியாகராஜனின் வில்லத் தனம் முழுதாக வெளிப்படத் தொடங்குகிறது. அதில் தனது தாத்தாவை பறிகொடுக்கிறார். அதன் தொடர்ச்சியாக அமைச்சரின் பி.ஏ.வான சார்லியின் கொலை நிகழ்கிறது.

விஜய் ஆண்டனியை கொல்லவும் நாள் குறிக்கப்படுகிறது. இறுதியில் அனைத்து எதிரிகளையும் எப்படி அழிக்கிறார். சூழ்ச்சிகளை எப்படி முறியெடுக்கிறார் என்பதை படத்தை ஒருமுறை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

துரோகங்களும், பழிவாங்கலும் நிறைந்திருக்கும் அரசியலையே திரைக்கதையின் அடிச்சரடாக வைத்திருக்கும் இயக்குநர், துரோகத்தின் வலியை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார். முழுக்க சண்டை , பழிவாங்கல் என காட்சிகள் அமைக்கப்பட்டாலும் முகம் சுழிக்காமல் படத்தோடு ஒன்ற முடிகிறது.

தியாகராஜன், சங்கிலிமுருகன், சார்லி, ஜி.மாரிமுத்து, என அத்தனை பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை திறம்படச் செய்துள்ளனர்.

ரசிகர் மன்ற அலப்பறைகள் ஏதும் இல்லாமல் ‘இமாலய வெற்றி’ ‘வசூலில் புதிய சாதனை’ என்று பீதிகளை கிளப்பாமல் சத்தமின்றி வெற்றிகளை கொடுத்துக் கொண்டு ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக உருவெடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி. இசையமைக்கும் வேலையை விட்டு விட்டு இவருக்கு ஏன் இந்த கதாநாயகன் ஆசை என்று கேள்விகளை எழுப்பியவர்களையும் தனது ரசிகர்களாக மாற்றியிருப்பதில் தான் விஜய் ஆண்டனியின் வெற்றி இருக்கிறது.

இவர் இரண்டு விஷயங்களில் தெளிவாக இருக்கிறார். ஒன்று தனக்கு வராத பஞ்ச் வசனங்கள், நடனம் போன்றவற்றை விடுத்து தனது முகத்திற்கும் நடிப்பிற்கும் ஒத்துவரும் கதாபாத்திரங்களை மட்டும் சரியாகச் செய்வது, இரண்டாவது அதற்கேற்ற அருமையான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பது.

இந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுக்கும் திறன் கைவரப் பெற்றதாலேயே ரசிகர்களுக்கு பிடித்த கதாநாயகனாகவும் வெற்றிகரமான தயாரிப்பளராகவும் விளங்குகிறார்.

நான், சலீம், பிச்சைக்காரன், சைத்தான், எமன் என இவரது படங்களின் வரிசையில் இந்தியா பாகிஸ்தான் படத்தை மட்டும் தவிர்த்து பார்த்தோமேயானால் அத்தனையும் கோபத்தை அடக்கி கொணடு மௌனமாய் இருக்கும் இளைஞனின் கதாபாத்திரங்கள். அந்த மௌனம் கலையும் சந்தர்ப்பங்கள் ஆக்‌ஷன் ஆரம்பமாகிறது. அது தியேட்டரில் பார்வையாளர்களின் கைதட்டல் மூலம் வெளிப்படுகிறது.

-மதரா

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon