மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 24 பிப் 2020

திருமணம் உங்களை குண்டாக்குமா?

திருமணம் உங்களை குண்டாக்குமா?

திருமணத்திற்குப் பிறகு உங்கள் துணையுடன் அடிக்கடி சண்டையிட்டு உங்களின் மனஅமைதி கெட்டுப்போகிறதா? ஆமாம் என்றால், உங்களுக்கு உடல் பருமன் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சமீபத்திய அமெரிக்க ஆய்வு சொல்கிறது. அதிக கொழுப்புள்ள உணவு வகைகளை உடல், கலோரிகளாக மாற்றம்செய்யும் செயல்பாட்டில் பிரச்னை ஏற்படுகிறதாம் எப்படி?

''மன அழுத்த நோயினால் நெடுநாட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாகவே உடல் பருமன் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அவர்களுக்கு இருக்கும் மனநலக் கோளாறுகளை சரி செய்வதே உடல் பருமனைக் குறைக்க முதல் வழி'' என்கிறார் அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜன் கிகோல்ட் கிளாசர்.

கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வருவது சகஜம்தான். ஆனால் அதன்பிறகு கொழுப்புள்ள உணவுகளை அவர்கள் எடுத்துக்கொண்டால் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் பலவிதமான பிரச்னைகள் ஏற்படுகிறது. கொழுப்புள்ள உணவில் உள்ள கலோரிகள் சில மட்டும் எரிந்துவிடும். மற்றவை இன்சுலினை அதிகமாகச் சுரக்கச் செய்து, கொழுப்பு அமிலங்களையும் அதிகமாக்கி, கரையாத கொழுப்பாக ரத்தத்தில் தங்கிவிடுகின்றன. உடல் பருமன் ஏற்பட எளிய வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

உணவு சாப்பிட்டபின் கலோரி எரிவது குறைந்துவிட்டால் ஒவ்வொரு வருடமும் 5.4 கிலோ எடை அதிகரிக்கும். பருமனாவதால் இதய நோயும், சர்க்கரை நோயும் எளிதாக வருகிறது. 24 முதல் 61 வயது வரை உள்ள 43 தம்பதிகளை இந்த ஆய்வுக்கு உட்படுத்தி இந்த முடிவை அறிவித்துள்ளார்கள்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon