மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 28 மா 2020

இந்தியாவில் 1,850 தரமற்ற மருந்துகள் விற்பனை!

இந்தியாவில் 1,850 தரமற்ற மருந்துகள் விற்பனை!

காய்ச்சல், தலைவலி என்றால் அடுத்த நிமிடம் மருந்துக் கடையில்தான் நிற்போம். காரணம், அந்தளவுக்கு மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாகி இருக்கிறோம். ஆனால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடும் மாத்திரை உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை சிறிதும் யோசிக்காமல் சாப்பிடுகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிற மருந்துகளில் 1,850 மருந்துகள் தரமற்றவை எனவும், 13 மருந்துகள் போலி எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை, நாடு முழுவதும் 36 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 650 மாவட்டங்களில் உள்ள சில்லறை மருந்து விற்பனைக் கடைகள், அரசு மருந்தகங்கள் மற்றும் 8 விமான நிலையங்கள் மற்றும் கப்பல் துறை முகாம்களில் இருந்து 47,954 மாதிரி மருந்துகள் சேகரிக்கப்பட்டு தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அந்த ஆய்வில், 1,850 மருந்துகள் தரமற்றவை எனவும், 13 மாதிரி மருந்துகள் போலியானவை எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்கள் அடங்கியிருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 15 மருந்துகளின் 224 மருந்து மூலக்கூறுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மத்திய சுகாதாரத் துறை நொய்டாவில் உள்ள தேசிய பயாலஜிக்கல் மையத்திடம் ஆய்வுப் பணியை ஒப்படைத்தது. இந்த ஆய்வுப் பணியோடு சர்வே எடுப்பது தொடர்பாக தேசியளவில் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

மாதிரி எடுக்கும் அலுவலர்கள், இந்திய மருந்தக குழு உறுப்பினர்கள் என 1,800 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாதிரி எடுக்கப்பட்ட மருந்துகள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருந்து ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை செய்யப்பட்டன.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon