மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

பல வண்ண முடிகளுடன் இனி திரியலாம்!

பல வண்ண முடிகளுடன் இனி திரியலாம்!

வெள்ளை முடிகளை மறைத்து இளமையுடன் இருப்பதாக காட்டிக்கொள்ள முடிக்கு அடிக்கும் கருப்புச் சாயம் கண்டறியப்பட்டது. இதைத்தான் ஆங்கிலத்தில் டை என்று அழைக்கிறார்கள். நவீன மாற்றங்களுக்கு ஏற்ப பல வகைகளில் ஹேர் டை மாற்றமடைந்தது. பவுடர், கிரீம், ஸ்பிரே என பல வடிவங்களில் ஹேர் டையை சந்தைப்படுத்தினார்கள். ரசாயன முறையில் தயாரிக்கப்படும் டை உடலுக்கு கேடு விளைவிக்கும் என்னும் குரல் எழுந்தபோது மருதாணியால் செய்யப்பட்ட இயற்கையான ஹென்னா டை பலரது கவனத்தை கவர்ந்தது. முடி நரைக்கவில்லை என்றாலும் இளசுகள் ஸ்டைலுக்காக ஹென்னா டையை பயன்படுத்தி பிரவுன் நிற முடியுடன் திரிந்தனர். இப்போது ஒரே டையில் பல வண்ணங்களில் முடியை மாற்றுமளவு ஒரு டையை கண்டறிந்துள்ளார் லாரன் பவ்கர்.

அன்சீன் என்னும் நிறுவனத்தைச் சேர்ந்த லாரன் பவ்கர் என்பவர், சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நிறம் மாறும் ஹேர் டை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார். பயர் (fire) என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஹேர் டை தட்பவெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நிறம் மாறும் தன்மைகொண்டது. அடர்சிவப்பு தொடங்கி பல்வேறு நுண்ணிய நிறங்களில் இந்த ஹேர் டை கிடைக்கிறது.

லண்டன் பேஷன் வீக்கில் இந்த ஹேர் டையை அறிமுகப்படுத்த லாரன் பவ்கர் திட்டமிட்டுள்ளார். சிலமுறை அலசினாலே கூந்தல் இயல்புநிலைக்குத் திரும்பிவிடும் என்பதால் இந்த ஹேர் டையை பயன்படுத்தும்போது பயம்கொள்ளத் தேவையில்லை. எனினும், இந்த டையை சந்தைக்குக் கொண்டுவர பெரிய பங்குதாரர்கள் யாரும் லாரன் பவ்கருக்கு கிடைக்கவில்லை. இதனால் இந்த ஹேர் டையைப் பயன்படுத்த சில காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon