மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

கோதுமை : 965 லட்சம் டன் உற்பத்தி!

கோதுமை : 965 லட்சம் டன் உற்பத்தி!

நடப்பு ராபி பருவத்தில் 965 லட்சம் டன் அளாவிலான கோதுமை உற்பத்தி செய்யப்படும் என்று, மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, நடப்பு ராபி பருவத்தில் கோதுமை பயிரிடுவது 7 சதவிகிதம் அதிகரித்து 317.81 லட்சம் ஹெக்டர் பரப்பளவுக்கு பயிரிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே பருவத்தில் 297.25 லட்சம் ஹெக்டராக இருந்தது. இந்த ராபி பருவத்தில் ஒட்டுமொத்தமாக 965 லட்சம் டன் கோதுமை உற்பத்தி செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கடுகு உற்பத்தி, நடப்பு ராபி பருவத்தில் 8.5 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என அரசு மதிப்பீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே பருவத்தில் 6.8 மில்லியன் டன் கடுகு உற்பத்தி செய்யப்பட்டது. பயிரிடுதலைப் பொருத்தவரை, கடந்த ஆண்டு இருந்ததைவிட 9 சதவிகிதம் அதிகரித்து 70.56 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் கடுகு பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே பருவத்தில் 64.53 லட்சம் ஹெக்டர் பயிரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆமணக்கு பயிரிடுவது கடந்த 2015-16ஆம் ஆண்டைவிட நடப்பு ஆண்டில் 25 சதவிகிதம் குறைந்துள்ளது. இதற்குக் காரணம், ஆமணக்கு விவசாயிகள் அதற்குப் பதிலாக பணப்பயிர்களை பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டியதே ஆகும். ஆமணக்கு சாகுபடியில் மொத்த பரப்பளவில் 5.65 லட்சம் ஹெக்டர் அளவுக்கு பயிரிட்டு குஜராத் முதலிடத்திலும், 1.70 லட்சம் ஹெக்டேர் பயிரிட்டுள்ள ராஜஸ்தான் இரண்டாமிடத்திலும் உள்ளது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon