மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 4 ஜூலை 2020

250 கோடி வருவாய் இலக்குடன் ரஸ்னா!

250 கோடி வருவாய் இலக்குடன் ரஸ்னா!

அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.250 கோடி வருவாய் ஈட்டும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக ரஸ்னா நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பியோமா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ரஸ்னா பிராண்டு, அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு, குளிர்பானங்கள் மற்றும் நொறுக்குத் தீனி தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. 1970களில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பெப்சி, கோக், தம்ஸ் அப் போன்ற அந்நிய பானங்களினால் போதிய வருவாயை ஈட்டமுடியாதபோதிலும் அதன்பின்னர் 1990-2000களில் ஓரளவுக்கு வருவாய் ஈட்டத் தொடங்கியது. 2009ஆம் ஆண்டில் குளிர்பானங்கள் சந்தையில் இதன் பங்கு 93 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரஸ்னா நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பிருஸ் கம்பட்டா கூறுகையில், ‘தற்போதைய நிலையில் 15 முதல் 16 சதவிகித வளர்ச்சியில் இருக்கும் ரூ.5000 கோடி மதிப்புடைய சந்தையில் நாங்கள் 5 சதவிகித பங்களிப்பை எதிர்நோக்கியுள்ளோம். அடுத்த மூன்று வருடங்களில் ரூ.250 கோடி வருவாய் திரட்ட இலக்கு வைத்துள்ளோம். எங்களது விடோஸ் பிராண்டு நொறுக்குத் தீனியை இவ்வாண்டில் அதிகளவில் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக ரூ.100 கோடி முதலீடு செய்துள்ளோம். துவக்கத்தில் இலங்கை, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவுசெய்துள்ளோம்’ என்று கூறினார்.

தற்போதைய நிலையில், ரஸ்னா தயாரிப்புகள் உலகின் 53 நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் ஒட்டுமொத்த விற்பனையில் ஏற்றுமதி மட்டுமே சுமார் 30 சதவிகித பங்களிப்பைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon