மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 12 ஆக 2020

பிரமாண்ட ஆதியோகி சிலை : மோடி திறந்துவைத்தார்!

பிரமாண்ட ஆதியோகி சிலை : மோடி திறந்துவைத்தார்!

ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை

லட்சக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை திறந்து வைத்தார். பிரதமரின் வருகையையொட்டி கோவையில் இருந்து வெள்ளிங்கிரி மலையடிவாரம் வரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மகா சிவராத்திரியையொட்டி, 112 அடி உயரமுடைய ஆதியோகி சிவனின் முகத்தோற்ற பிரமாண்ட சிலை வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொண்டு சிலையை திறந்து வைப்பதற்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு வந்தார். விமானநிலையத்தில் பிரதமர் மோடியை, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யசாகர்ராவ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர். இதில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் , இல. கணேசன் எம்.பி., அதிமுக எம்.பி.யும், மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பிதுரை ஆகிய முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர், அங்கிருந்து 4 விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு பிரதமர், ஆளுநர், முதல்வர் ஆகியோர் சென்றார்கள். அங்கு பிரதமருக்கு பூங்கொத்து கொடுத்து ஜக்கி வாசுதேவ் வரவேற்று, தியான லிங்க மண்டபத்திற்கு பிரதமரை அழைத்துச் சென்றார்.

ஜக்கி வாசுதேவுடன் தியான லிங்க மண்டபத்திற்குச் சென்ற பிரதமர் மோடி தனது கைப்பட வழிபாடு நடத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் தியான லிங்க மண்டபத்தில் மோடி தியானம் செய்தார். அதற்குப் பிறகு ஈஷா யோகா மையத்தில்

அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

விழா முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் இரவு 9 மணிக்கு டெல்லி செல்கிறார்.

ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை திறப்பு விழா முடிந்தபின்னர், நாளை 25ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பாஜக மூத்த தலைவர் அத்வானி கோவை வருகிறார். அவர் 27ஆம் தேதி வரை ஈஷா யோகா மையத்தில் தங்கியிருப்பார் என்று தெரியவருகிறது

வெள்ளி, 24 பிப் 2017

அடுத்ததுchevronRight icon