மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஏப் 2020

உதயமானது எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை!

உதயமானது எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, இன்று மாலை எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிளவுபட்டதையடுத்து, அதிமுக-வில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதையடுத்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனிக்கட்சியைத் தொடங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் சசிகலா, அதிமுக-வை கைப்பற்றியதையடுத்து அவருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி எழுப்பினார். அதன்பிறகு ஓ.பி.எஸ்.ஸுடன் இணைந்து செயல்படுவதாக தீபா அறிவித்தார்.அதன்பிறகு அதிலும் மாற்றத்தை ஏற்படுத்தி ஓ.பி.எஸ்.ஸுடன் இணைவதற்கு தயக்கம்காட்டிய தீபா ஜெயலலிதா பிறந்தநாள் அன்று தனது அரசியல் பயணம் குறித்து அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை தீபா தனது வீட்டின் ஒரு பகுதியை கட்சி அலுவலகமாக மாற்றி அதை திறந்துவைத்தார். பின்னர், மதுரவாயலில் உள்ள குழந்தைகள் காப்பகம் சென்றார். அங்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கினார். இதைத் தொடர்ந்து, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இன்று மாலை எனது அரசியல் கட்சி மற்றும் கட்சியின் சின்னத்தை அறிமுகம் செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை தி.நகரில் இன்று மாலை 6 மணிக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தீபா, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பைத் தொடங்குவதாக அறிவித்தார். ஜெயலலிதா பிறந்த நாளில் எனது அரசியல் பிரவேசத்தை தொடங்குவதில் பெருமையடைகிறேன்.ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக பணிகளைத் தொடர்வேன். இந்த இயக்கம் மாபெரும் வெற்றிபெறும். இரட்டை இலையை மீட்போம். தமிழக மக்கள் ஒரு துரோகக் கூட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். தற்போதைய அரசியல் சூழலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது.

என்னை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டேன். தமிழகத்தை ஒளிமயமான எதிர்காலத்துக்கு கொண்டு செல்வேன். எனக்கு ஆதரவு தெரிவித்த மக்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தீபக்கின் நிலைப்பாடு தெளிவற்ற நிலையில் உள்ளது. தற்போதைக்கு இது பேரவையாக தொடரும். பின்னர் அடுத்தகட்ட முடிவு அறிவிக்கப்படும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் நிச்சயமாகப் போட்டியிடுவேன். அதுமட்டுமன்றி, வருகிற உள்ளட்சித் தேர்தலிலும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை போட்டியிடும் என்றார். மேலும், பேரவையின் பொருளாளராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அதன்பின்னர், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அமைப்பின் கொடியை அறிமுகப்படுத்தினார். அதில், கருப்பு, சிவப்பு, வெள்ளை கலருடன் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். செங்கோல் கொடுத்தபடி இருக்கும் படம் நடுவில் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon