மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 28 மா 2020

டிஜிட்டல் திண்ணை: தினகரன் vs நடராஜன்! - அதிமுக-வில் அதிகாரப் போர்!

டிஜிட்டல் திண்ணை: தினகரன் vs நடராஜன்! - அதிமுக-வில் அதிகாரப் போர்!

மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“அரசியலில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஜெயலலிதாவுக்கு இறுதிச் சடங்குகளை செய்தவர் தீபக். ஜெயலலிதாவின் அண்ணன் மகன் இவர். சசிகலாவை தொடர்ந்து எதிர்த்துவருபவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ஆனால் தீபாவின் தம்பியான தீபக், தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார். இந்தச் சூழ்நிலையில் நேற்று பிற்பகலில் செய்தியாளர்களைச் சந்தித்தார் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் அப்போது தினகரனுடன் இருந்தனர். அதன்பிறகுதான் சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசிவந்த தீபக் திடீரென, ‘டி.டி.வி.தினகரனை பொதுச் செயலாளராக நியமித்ததை ஏற்க முடியாது’ என்று பேச ஆரம்பித்தார். தீபக், திடீரென தினகரனை எதிர்க்க என்ன காரணம்? என்று விசாரித்தோம். ’சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு வந்து அவர் சிறைக்குச் செல்வார் என்று நடராஜன் தரப்பில் எதிர்பார்க்கவில்லை. சசிகலா சிறைக்குச் செல்லும் நேரத்தில் தினகரனை துணை பொதுச் செயலாளராக அறிவிப்பார் என்பதும் நடராஜன் எதிர்பார்க்காதது. தீபக்கை பொருத்தவரை, முழுக்கவே நடராஜன் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தார். இப்போதும் அவர் சொல்வதுதான் தீபக்கிற்கு வேதவாக்கு என்று சொல்கிறார்கள். நடராஜனுக்கு தினகரன் கட்டுப்பாட்டில் கட்சி போவதில் விருப்பம் இல்லை என்று சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அதனால்தான் இதை நேரடியாக அவர் சொல்லாமல், தீபக் மூலமாக சொல்லவைக்கிறார் என்றும் சொல்கிறார்கள். பரப்பன அக்ரஹாராவில் இருக்கும் சசிகலாவை விரைவில் நடராஜன் சந்திக்க இருக்கிறார். அப்போது இது சம்பந்தமாக அவர் பேசுவார் என்றும் சொல்கிறார்கள். ‘முடிவெடுக்கும் அதிகாரம் எதுவும் தினகரனுக்கு கொடுக்கக் கூடாது. முதல்வர் பழனிச்சாமிக்கே அந்த அதிகாரத்தைக் கொடுக்கலாம்’ என்று நடராஜன் தரப்பில் சொல்லப்போகிறார்களாம். இந்த குடும்ப பிரச்னையில்தான் இப்போது தீபக் பகடைக்காயாக மாறியிருக்கிறார். தினகரனா... நடராஜனா... என்ற அதிகார யுத்தம்தான் இப்போது அதிமுக-வில் கிளம்பியிருக்கிறது. ஜெயிக்கப்போவது யாரு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் டைப்பிங் செய்ய ஆரம்பித்தது.

“எப்படியாவது பன்னீர் அணியில் இருப்பவர்களை இழுத்துவிட வேண்டும் என்பதில் தொடர்ந்து சசிகலா டீமில் இருப்பவர்கள் ஆர்வம்காட்டி வருகிறார்கள். பன்னீருக்கு உதவியாக இருக்கும் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் சசி டீமில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர். ‘உங்களுக்கு என்ன வேணுமோ அதை செய்யத் தயாராக இருக்கோம். எல்லோரும் இங்கே வந்துடுங்க..’ என்று அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். ‘அண்ணனை பொருத்தவரை, முதல்வராக இருக்க வேண்டும் என்பதுகூட அவசியம் இல்லை. அவர் எதிர்பார்ப்பது மரியாதையை மட்டும்தான். அது அங்கே இல்லைன்னுதான் வெளியே வந்தாரு. அவருக்கு மரியாதையைக் கொடுத்து, அமைச்சரவையில் நிதித்துறையை ஒதுக்கினால் அங்கே அழைச்சிட்டு வர்றோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு சசி டீம் ஓ.கே. சொன்னதுடன், ‘ஜெ. சமாதியில் மீண்டும் அவரை உட்காரச் சொல்லுங்க. அம்மாவின் ஆன்மா சொன்னதாகச் சொல்லி, பேசச் சொல்லுங்க. கட்சி ஒற்றுமைதான் முக்கியம்னு அம்மா ஆன்மா சொன்னதாக சொல்லச் சொல்லுங்க. அதன்பிறகு இங்கே சேர்த்துக்கலாம்’ என்று ஐடியாவும் கொடுத்திருக்கிறார்கள். இந்த விஷயம், அமைச்சர் ஒருவருக்குப் பிடிக்கவில்லை. பன்னீர் மீண்டும் உள்ளே வந்தால், தங்களுக்கு முக்கியத்துவம் குறையும் என நினைத்த அந்த அமைச்சர், பன்னீரை தேடிப்போன முக்கிய நிர்வாகிகளிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். அவர்கள் எல்லோரும் சேர்ந்து பன்னீருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்களாம். ‘உங்களை நம்பித்தான் நாங்க வந்தோம். இப்போ நீங்க அங்கே போனால் எங்க எதிர்காலம் என்ன ஆகும். அதனால நீங்க போகக்கூடாது’ என்று அவர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்களாம். அதனால் வேறுவழியில்லாமல் பன்னீர் அமைதியாக இருக்கிறாராம். அதன்பிறகுதான் ஆர்.கே.நகருக்குப் புறப்பட்டார் பன்னீர். நலத்திட்ட உதவிகளை அங்கே வழங்கிவிட்டு, சசிகலாவுக்கு எதிராக மீண்டும் பேசவும் ஆரம்பித்துவிட்டார்” என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ். அதற்கு ஃபேஸ்புக் போஸ்ட் கொடுத்ததும், லைக் போட்டு ஷேர் செய்துவிட்டு சைன் அவுட் ஆனது வாட்ஸ் அப்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon