மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 28 மா 2020

ஜெ. பெயரில் அரசு விழா : தடுத்து நிறுத்த ஸ்டாலின் கோரிக்கை!

ஜெ. பெயரில் அரசு விழா : தடுத்து நிறுத்த ஸ்டாலின் கோரிக்கை!

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழா கொண்டாட்டங்களை, அதுவும் அரசுப் பணத்தில் நடத்தப்படுவதை தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘மரம் வளர்ப்போம் வளம் பெறுவோம்’ என்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கி வைத்ததுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு வருடமும் மறைந்த முன்னாள் முதல்வரின் பிறந்தநாளில் இதுபோல அறிவிக்கப்பட்டு, இதுவரை நடப்பட்ட இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளின் கதி என்னவென்றே தெரியாதநிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு, தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவர் பெயரில் மரம் நடும் விழா திட்டத்தை இந்த வருடம் தொடங்கிவைப்பதன் மூலம், ‘குற்றவாளி சசிகலாவின் பினாமி அரசு’ சமுதாயத்தில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீதான இளைய சமுதாயத்தின் நம்பிக்கையை சீர்குலைக்கும் விதத்தில் இது அமைந்துள்ளது. 'பொதுவாழ்வில் தூய்மை' என்ற கோட்பாடே அதிமுக ஆட்சியில் எள்ளி நகையாடப்படும் நிலைக்கு வந்துவிட்டது என்பது உள்ளபடியே வேதனையளிக்கிறது. அதைவிட, இந்த மரம் நடும் விழாவிற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளரும், தலைமைச் செயலாளரும் இணைந்து முழுப்பக்க விளம்பரம் கொடுத்திருப்பது, ‘நிர்வாகத்தில் நேர்மை, தூய்மை’ போன்ற விஷயங்களை எல்லாம், இந்த குற்றவாளி சசிகலாவின் பினாமி அரசில் தங்களாலும் நிலைநாட்ட முடியாது என அவர்கள் ஒப்புக்கொள்வதாகவே அமைந்துள்ளது.

அதுவும் நேர்மைக்குப் பெயர் பெற்ற தலைமைச் செயலாளர் இப்படியொரு விளம்பரத்திற்கு துணை போயிருப்பது, அதிமுக ஆட்சியில் பதவிக்கு வரும் ஒவ்வொரு தலைமைச் செயலாளரும் அந்த அரசின் இதுபோன்ற சட்டத்திற்குப் புறம்பான, நேர்மையற்ற செயல்களுக்குத் துணை போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையே காட்டுகிறது. இதனைப் பார்க்கும்போது இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் நிர்வாகத்திற்கே சவால்விடும்வகையில் அமைந்திருக்கிறது தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு. ஒரு குற்றவாளியின் பிறந்த நாள் விழாவிற்கு மரம் நடுவதற்காக மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கவும், முழுப்பக்கம் விளம்பரம் கொடுத்து அரசுப் பணத்தை செலவழிக்கவும் எந்த அரசு விதி அல்லது கருவூல விதி அனுமதிக்கிறது என்பதை தலைமைச் செயலாளரும், நிதித்துறை செயலாளரும் உடனடியாக மக்களுக்கு விளக்க வேண்டும்.

இதுவரை அதிமுக என்ற கட்சி குற்றவாளிகளை கொண்டாடிக் கொண்டிருந்தது. அது அவர்கள் உள்கட்சி பிரச்சினை. ஆனால் இப்போது அரசுப் பணத்தையே எடுத்து குற்றவாளிக்கு பிறந்த நாள் கொண்டாடும் அசிங்கத்தை ஏற்படுத்தி, முழுப்பக்கம் விளம்பரம் மூலம் தமிழகத்தின் மானத்தை கப்பலேற்றியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்கு பெரும் தீங்கு விளைவித்து விட்டார். ஆகவே, அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு முற்றிலும் முரணானவகையில், குற்றவாளியின் பெயரில் மரம் நடும் திட்டத்தை துவக்கி வைத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த மரம் நடும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய நிதித்துறை செயலாளர், இதற்காக விளம்பரம் கொடுத்த சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலத்தின் பொறுப்பு ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன்.

அரசியல் சட்டப்படி ஆட்சி செலுத்துகிறோம் என்று பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணத்தை ஆளுநர் முன்பு எடுத்துக்கொண்டுவிட்டு, இன்றைக்கு உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழா கொண்டாட்டங்களை, அதுவும் அரசுப் பணத்தில் நடத்தப்படுவதை தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon