மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஏப் 2020

மஹா சிவராத்திரி : மணற்சிற்பம் வடித்த சுதர்சன்

மஹா சிவராத்திரி :  மணற்சிற்பம் வடித்த சுதர்சன்

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் சிவனை சிற்பமாக வடிவமைத்துள்ளார்.

இந்தியாவில் மணற்சிற்பக் கலை பிரபலமாவதற்கு காரணமாக இருந்தவர் சுதர்சன் பட்நாயக். இவருடைய ஏழாவது வயதிலிருந்து மணலில் சிற்பம் செதுக்குவதைத் தொடங்கினார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பங்களை உருவாக்கியுள்ளார். உலக அளவில் நிறைய பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் உலக சாதனையாளர் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.

பல்வேறு நிகழ்வுகளுக்கு தன் மணற்சிற்பம்மூலம் ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்து வருகிறார். அந்தவகையில், இன்று மஹா சிவாராத்திரியை முன்னிட்டு பூரி கடற்கரையில் சிவபெருமான் உருவத்தை வடிவமைத்துள்ளார். அதில் மஹா சிவராத்திரிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் உலக அமைதியை வலியுறுத்தியுள்ளார். இந்த மணற்சிற்பம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, மணற்சிற்பமாக காளியை வடிவமைத்தார். அதன்மூலம், தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதுபோல, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 1,000 கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பங்களை உருவாக்கி, லிம்கா உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தார். இவ்வாறு ஜாதி, மதம், மொழியைக் கடந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon