மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

நீட் தேர்வு தேவையில்லை : முதல்வர் பழனிச்சாமி

நீட் தேர்வு தேவையில்லை  : முதல்வர் பழனிச்சாமி

கோவையில் மோனோ ரயில் திட்டம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் நீட் தேர்வு தொடர்பாக வரும் 27ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாகவும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்துவைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர் பழனிச்சாமி கோவை சென்றார்.

பின்னர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிச்சாமி, "ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் விவசாயிகளை பாதிக்காதவகையில் நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு தொடர்பாக வரும் 27 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளேன். இந்தச் சந்திப்பில் நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை எடுத்துச் சொல்லவுள்ளேன். நீட் தேர்வு தமிழகத்திற்கு உகந்தது அல்ல" என்றார்.

மேலும் பேசிய அவர், "300 கோடி செலவில் கோவை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும். கோவையில் மோனோ ரயில் திட்டம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். ரூ.120 கோடியில் வெள்ளக்கோவில் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். ஜெயலலிதா கொண்டு வர நினைத்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

5 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படும். மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படும். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை தேவை என ஒருசிலர் வேண்டுமென்றே கூறி வருகின்றனர்” இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon