மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

தமிழர்கள் பெருமை பேசும் பாகுபலி 2 !

தமிழர்கள் பெருமை பேசும் பாகுபலி 2 !

பாகுபலி திரைப்படம் இந்திய சினிமாவை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் சென்றது எனச் சொல்வது முழுவதும் பொருந்தும். கிராஃபிக்ஸ், மேக்கிங், திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பு என அனைத்திலும் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட திரைப்படமான பாகுபலி, தனது அடுத்த பாகத்தின் மேக்கிங்கை முடித்துக்கொண்டு தற்போது கம்ப்யூட்டருக்குள் அடங்கியிருக்கிறது. பாகுபலி திரைப்படத்தின் மொத்த வசூலில் தமிழகம் கொடுத்த பங்கு மிகச் சிறப்பானது. முதல் இரண்டு வாரங்களில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமான (ரூ.64 கோடி) வசூல் பெற்றுக்கொடுத்தது தமிழகம்.

சத்யராஜ், ரோகினி, ரம்யா கிருஷ்ணன் என தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர்களை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தது சிறப்பாக வொர்க்-அவுட் ஆகியிருந்தது. ஏதோ மாற்றுமொழித் திரைப்படத்தின் டப்பிங்கை பார்ப்பதுபோல அல்லாமல், மற்ற மொழிகளுக்கு எடுத்திருந்த கடும் முயற்சியையே தமிழ் பதிப்புக்கும் எடுத்திருந்ததே இந்த வெற்றிக்குக் காரணம். இதைப் புரிந்துகொண்டு, இப்போது உருவாகிவரும் பாகுபலி 2 திரைப்படத்தின் மூன்றாவது போஸ்ட்டரில் கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்திருக்கும் கோவிலின் கோபுரத்தை குறிப்பிட்டிருக்கிறார்கள். யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தை போஸ்டரில் பயன்படுத்தியிருப்பது மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.

ஒரு பக்கம் யானையின்மேல் பிரபாஸ் நிற்பதுபோலவும், இன்னொருபுறம் கங்கைகொண்ட சோழபுரத்தின் கோவில் முகப்பும், அதனருகே ஒரு ராட்சத உருவம் எரிந்துகொண்டு கையில் தீப்பங்களுடன் நிற்பதுபோலவும் டிசைன் செய்திருக்கிறார்கள். ஒருவேளை, தமிழகத்து அரசர்கள் மகிழ்மதி நாட்டைத் தாக்குவதுபோல படத்தின் கதையை ராஜமௌலி கொண்டுபோயிருக்கலாம். ஆனால் வரலாற்றுத் தவறுகள் நடைபெற வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏனென்றால், ராஜமௌலியின் டீமில் வைரமுத்துவின் மகனும், எழுத்தாளரும், பாடலாசிரியருமான மதன் கார்க்கி இடம்பெற்றிருக்கிறார். எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்து பார்க்கவேண்டியதுதான்.

இப்போதே யானையின் தும்பிக்கைமூலமாக பிரபாஸ் அதன்மீது ஏறுவதை ONG BAK 2 திரைப்படத்திலிருந்து திருடிவிட்டார் என்று நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கிவிட்டார்கள். யானைக்கு முன்பகுதியிலிருந்து அதன்மீதேறும் வழக்கம் இந்தியாவில் இருந்ததில்லை. யானைகளின் முதுகின் மீது பாகனைக்கூட உட்காரவைத்திடாத ஒரு பாரம்பரியத்தைக் கொண்ட இந்திய நாட்டில் தும்பிக்கை வழியாக யாரும் ஏறியதாக பதிவுகள் இல்லை.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon