மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

நீதி கிடைக்கும் வரை போராட்டம் : ஓ.பன்னீர்செல்வம்

நீதி கிடைக்கும் வரை போராட்டம் : ஓ.பன்னீர்செல்வம்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுக-வினரால் கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் நடைபெறும் விழாவில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். ஜெயலலிதாவின் படத்திற்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவருடன் முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன், கே.பி.முனுசாமி,பொன்னையன், பி.ஹெச்.பாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது, ‘திராவிட இயக்க வரலாற்றில் அழிக்க முடியாத தலைவராக ஜெயலலிதா விளங்குகிறார். தன்னுடைய பிறந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கூறியவர் அவர். ஆனால் இன்று அவருடைய விருப்பத்திற்கு மாறான விஷயங்கள் கட்சியில் நடக்கின்றன. அதிமுக என்னும் மக்கள் இயக்கத்தை யாரும் ஒன்றும் செய்ய இயலாது. கண்டிப்பாக ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

குடும்ப ஆதிக்கம்

கட்சியும் சரி, ஆட்சியும் சரி, ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்துக்குள் சென்றுவிட்டன. அந்தக் குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுக-வை மீட்பதே நாங்கள் மேற்கொள்ளும் தர்மயுத்தமாக இருக்கும். உலகமெங்கும் தர்மயுத்தங்கள் வெற்றிபெற்றதாகத்தான் வரலாறு இருக்கிறது. நாங்களும் இந்த தர்மயுத்தத்தின் இறுதியில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்’ என்றார்.

இதைத் தொடர்ந்து, தண்டையார்பேட்டையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், ‘தொண்டர்களின் எண்ணங்களின்படி நாங்கள்தான் உண்மையான அதிமுக. 121 எம்.எல்.ஏ.,க்களைத் தவிர, மக்கள் அனைவரும் எங்களுடன்தான் உள்ளனர். தீபக் கூறியது தனிப்பட்ட கருத்து; தீபக் தனது உள்ளத்தில் இருந்து கருத்துகளை கூறியுள்ளார். தீபாவை நாங்கள் வரவேற்கிறோம்.

தினகரனுக்கு பதில்

அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர் (தினகரன்) எங்களுக்கு அழைப்பு விடுப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. தேர்தல் நடந்து, பொதுச்செயலாளர் வரும் வரை ஜெயலலிதாதான் கட்சியின் பொதுச் செயலாளர். அதுவரை நாங்கள்தான் நிர்வாகிகள். சசிகலா சட்டத்திற்கு விரோதமாக தேர்வு செய்யப்பட்டது செல்லாது. அவரால் நீக்கப்பட்ட உத்தரவும் செல்லாது. ஜெ., அமர்ந்த பொதுச்செயலாளர் இடத்தில் அமர யாருக்கும் தகுதியில்லை. கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படாதவர் எப்படி துணை பொதுச்செயலாளராக முடியும்.

ஜெ மரணம் - நீதி விசாரணை

அதிமுக தலைமை அலுவலகம் தானாக எங்களிடம் வரும். ஜெயலலிதா மீது மதிப்பு வைத்திருந்தால், அவரது மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். நீதி விசாரணை நடந்தால் ஜெயலலிதா மரணத்தில் உண்மை தெரியவரும்.. எம்.எல்.ஏ.,க்கள் யாரும் தொகுதிப் பக்கம் செல்லவில்லை. சட்டசபையில் இருந்து எம்.எல்.ஏ.,க்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது கண்டிக்கத்தக்கது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon