மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

ரூ.251 ஸ்மார்ட்போன் நிறுவனத் தலைவர் கைது!

ரூ.251 ஸ்மார்ட்போன் நிறுவனத் தலைவர் கைது!

ஸ்மார்ட்போன்களை மலிவு விலையில் 251 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அறிவித்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மோகித் கோயல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காசியாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அயம் எண்டர்பிரைசஸ் (Ayam Enterprises) நிறுவனத்தில் "ஃபிரீடம் 251" செல்போன் விநியோகிக்கும் உரிமை தருவதாகக் கூறி 16 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கோயல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காஸியாபாத் காவல்துறை உதவி ஆணையர் மனிஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ”கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அயம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ’ஃப்ரீடம் 251’ ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்களிடம் விநியோகிக்கும் உரிமையை கோயலும் அவரது நிறுவனமும் வற்புறுத்தி வழங்கியுள்ளனர். இதற்கான டெபாசிட் தொகையாக 30 லட்சம் ரூபாயும் பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் அயம் நிறுவனத்திடம் 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தயாரிப்புகளை மட்டுமே ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தந்துள்ளது. இன்னும் 16 லட்சம் மதிப்புள்ள தயாரிப்புகளை தராமல் மோசடி செய்துவிட்டதாகவும், ரூ.16 லட்சம் பணத்தைக் கேட்டால் நிறுவனத்தின் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நிறுவனத்தின் உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலகத்திலேயே மிகவும் குறைந்த விலையில் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்வதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த மலிவு விலை போனுக்காக 30,000 பேர் பணம் செலுத்தி பதிவு செய்துள்ளனர். மேலும் 7 கோடிப்பேர் ஸ்மார்ட்போன் பெறுவதற்காக முன்பதிவு செய்துவைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்நிறுவனத் தலைவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon