மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி : மோடி வாழ்த்து!

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி : மோடி வாழ்த்து!

மராட்டிய மாநிலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. மும்பை மாநகராட்சித் தேர்தலில் 2 தமிழர்கள் மாநகர் மன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மோடி வாழ்த்து

பிரதமர் மோடியின் உயர் மதிப்புக்கொண்ட பண மதிப்புநீக்க நடவடிக்கைக்குப் பின்னர் மராட்டியத்தில் நடைபெற்ற இந்தத் தேர்தல் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளித்து இருப்பதாக பாஜக-வினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் தங்களது கட்சிக்கு ஆதரவு அளித்த மராட்டிய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றிகூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக கைப்பற்றியது

மராட்டிய மாநிலத்தில் மும்பை, தானே, புனே, நாசிக், நாக்பூர், உல்லாஸ்நகர், பிம்ரி- சிஞ்ச்வாட், சோலாப்பூர், அகோலா, அமராவதி ஆகிய 10 மாநகராட்சிகளுக்கும், 25 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கும், 283 பஞ்சாயத்து சமிதிகளுக்கும் இரண்டு கட்டமாக கடந்த 16 மற்றும் 21ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சிவசேனா, பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் தனித்து நின்றன. இந்நிலையில், மும்பை மாநகராட்சி உள்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதன் முடிவில், பெரும்பாலான இடங்களை பாஜக கைப்பற்றியது.

227 வார்டுகளைக் கொண்ட மும்பை மாநகராட்சி கடந்த 20 ஆண்டுகாலமாக சிவசேனாவின் கோட்டையாகத் திகழ்ந்து வந்தது. இந்தத் தேர்தலில் அக்கட்சி 84 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் கடந்த தேர்தலில் 31 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற பாஜக, இந்த தடவை 82 இடங்களைக் கைப்பற்றி திடீர் எழுச்சியைக் கண்டது. காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 9 இடங்களிலும், மராட்டிய நவநிர்மாண் சேனா 7 இடங்களிலும் மட்டுமே வெற்றி கண்டன. அதேபோல் புனே, நாக்பூர், நாசிக், உல்லாஸ் நகர், அமராவதி, அகோலா, பிம்ரி-சிஞ்ச்வாட் ஆகிய மாநகராட்சிகளிலும் பாஜக வெற்றிபெற்றுள்ளது. மற்ற மாநகராட்சிகளிலும் முந்தைய தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்றது.

2 தமிழர்கள் வெற்றி

மும்பை மாநகராட்சி தேர்தலில் 2 தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தாராவியில் உள்ள 187வது வார்டில் சிவசேனா வேட்பாளராக தாராவி தாலுகா, சிவசேனா துணைத் தலைவர் பி.எஸ்.கே. முத்துராமலிங்கத்தின் மனைவி மாரியம்மாள் போட்டியிட்டார். அதில், மாரியம்மாள் 6,846 ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்றார்.

அதையடுத்து, சயான் கோலிவாடா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 176வது வார்டில் தமிழ் வேட்பாளர்கள் ரவிராஜா (காங்கிரஸ்), கராத்தே முருகன் (பா.ஜனதா), எஸ்.ஏ.சுந்தர் (அதிமுக) உள்பட மொத்தம் 17 பேர் போட்டியிட்டனர். இதில், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ரவிராஜா 3 ஆயிரத்து 814 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon