மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 ஜன 2021

இயற்கையின் தோழன் என்விகிரீன் பைகள்!

இயற்கையின் தோழன் என்விகிரீன் பைகள்!வெற்றிநடை போடும் தமிழகம்

பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் பயன்படுத்துவதால் மனிதனுக்கும் சுற்றுச்சுழலுக்கும் பல்வேறு கேடுகள் ஏற்படுவதால் பல இடங்களில் அதன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. ஆனால் இன்னும் சில மக்கள் கடைக்கு செல்லும்போது துணிப் பை எடுத்துச் செல்ல மறந்துவிடுகின்றனர். இதனால், சந்தையில் வாங்கும் பொருட்களை கைகளில் கொண்டுவரக்கூடிய நிலைமைக்கு ஆளாகின்றனர். இது மிகவும் சிரமமாக இருக்கிறது. மங்களூரில் பிறந்த அஷ்வத் ஹெக்டே, தற்போது கத்தாரில் தொழிலதிபராக உள்ளார். பொதுமக்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்னை அவரை மிகவும் பாதித்தது.

இந்நிலையில் அஷ்வித், எளிதில் மக்கக்கூடிய என்விகிரீன் பையை மக்களின் பயன்பாட்டுக்காக உருவாக்கியுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு மங்களூர் மாநகராட்சி பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பதற்கு தடை விதித்தது. ஆனால் இந்த முடிவு அதற்கான மாற்று ஏற்பாடுகளை முடிவு செய்யாமலேயே எடுக்கப்பட்டது. அனைத்து மக்களும் ஒரு கிலோ சர்க்கரை வாங்குவதற்கு ரூ.5 அல்லது 15 மதிப்பிலுள்ள பையை வாங்க முடியாது. எனது சொந்த ஊரிலும் இதுபோன்ற பிரச்னைகளைக் கேட்டபோது, அதற்கான மாற்று வழியைக் கொண்டு வர முடிவு செய்தேன் என அஷ்வித் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்னை குறித்து நான்கு வருடங்களாக ஆராய்ச்சி செய்து, எளிதில் மக்கும் மற்றும் சுற்றுச்சுழலுக்கு 100 சதவிகிதம் பாதிப்பு இல்லாத பைகளை உருவாக்கும் என்விகிரீன் நிறுவனத்தை அஷ்வித் தொடங்கினார்.

இந்தப் பைகள் பார்ப்பதற்கு பிளாஸ்டிக் போன்று இருக்கும். ஆனால் இது இயற்கை ஸ்டார்ச் மற்றும் தாவர எண்ணெயால் உருவாக்கப்பட்டது. என்விகிரீன் பைகளை அறையில் உள்ள வெப்பநிலையில் ஒரு கிளாஸ் நீரில் வைத்தால், அது ஒரு நாளில் கரைந்துவிடும். அதே பையை கொதிக்கும் நீரில் வைத்தால், 15 விநாடிகளில் கரைந்துவிடும். மேலும் பயன்படுத்திய பிறகு தூக்கியெறியப்பட்டு 180 நாட்களுக்குள்ளே இந்த பைகள் மக்கிவிடும். அதனால் மக்கள் இந்தப் பைகளால் சுற்றுச்சுழலுக்கு கேடு வருமோ என அச்சப்பட வேண்டாம். அதுமட்டுமல்லாமல், இந்தப் பை உண்ணக்கூடியவை. விலங்குகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

இதுகுறித்து அஷ்வித் கூறுகையில், ‘என்விகிரீன் பைகள் மற்ற பிளாஸ்டிக், துணி மற்றும் தாள் பைகளைவிட முற்றிலும் வேறுபட்டவை. இந்தப் பை உருளைக்கிழங்கு, மரவள்ளி, சோளம், இயற்கை ஸ்டார்ச், தாவர எண்ணெய், வாழை மற்றும் பூ எண்ணெய் உட்பட 12 பொருட்களால் உருவாக்கப்பட்டது. முதலில், அனைத்து மூலப்பொருட்களும் திரவ வடிவில் மாற்றப்பட்டு, ஆறு படிநிலை செயல்முறைகளில் தயாரிக்கப்படுகிறது.

இதில் எந்தவித கெமிக்கலும் பயன்படுத்தவில்லை. அந்தப் பையில் பூசப்பட்டுள்ள வர்ணம்கூட இயற்கையானது. இந்த என்விகிரீன் பையின் விலை பிளாஸ்டிக் பைகளைவிட 35% அதிகமாகவும் துணிப் பைகளைவிட 500% குறைவாகவும் உள்ளது. அதாவது, ஒரு பிளாஸ்டிக் பை 2 ரூபாய் என்றால் என்விகிரீன் பை 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், என்விகிரீன் பைகளை பல சோதனைக்கு உட்படுத்திய பின்னரே ஒப்புதல் அளித்தது. அதாவது சோதனையில், அந்தப் பை மீது சூடேற்றப்பட்ட இரும்புக் கம்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்தப் பை உருகவில்லை. பிளாஸ்டிக் பையில் வரும் புகையும் வரவில்லை. மேலும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் நிறுவனம் மற்றும் ஸ்ரீராம் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவையும் என்விகிரீன் பைகளை சோதித்தன.

இதையெல்லாம், தாண்டி அந்தப் பை எந்தவித விளைவும் ஏற்படுத்தாது என்பதை நிரூபிக்க அஷ்வித் என்விகிரீன் பையை சாப்பிட்டுக் காட்டினார்.

60 பேர் கொண்ட குழுவை வைத்து பெங்களூருவில் ஒரு கம்பெனியை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு மாதமும் 1,000 மெட்ரிக் டன் பைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தப் பைகளை உருவாக்குவதற்கான மூலப் பொருள்கள் விவசாயிகளிடம் வாங்குவதால், அவர்கள் தொழில் வளர்ச்சியடைவதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும். மேலும் எங்களுக்குத் தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான விதைகளை அவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன்.

கத்தார் மற்றும் அபுதாபியில் இந்தப் பைகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தற்போது இந்தியாவில் முழு வீச்சில் விற்பனை தொடங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைச்சர், வன மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் 15 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 9,000 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. மறுபுறம் 6,000 டன் கழிவுகள் சேகரிக்கப்படவில்லை.

என்விகிரீன் பைகள் இந்தப் பிரச்னையை எளிதாக்குவது மட்டுமல்லாமல், இயற்கையைப் பாதுகாக்க நினைக்கும் மக்களுக்கு உதவுவதுடன், அவர்கள் அன்றாட வாழ்க்கையை வாழ வழிவகுக்கிறது என தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon