மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

முதிர்ச்சி அடையாத ராகுல் : ஷீலா தீட்சித்

முதிர்ச்சி அடையாத ராகுல்  : ஷீலா தீட்சித்

ராகுல் காந்தி இன்னும் முதிர்ச்சி அடையவில்லை, அவருக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் என்று, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.

பிரபல தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக நான் பிரச்சாரம் செய்யவில்லை என்று கூறுவது தவறானது. கட்சி எங்கெல்லாம் என்னை பிரச்சாரம் செய்யச் சொன்னதோ அங்கெல்லாம் நான் பிரச்சாரம் செய்தேன். உடல் நலக்குறைவு காரணமாக சில இடங்களுக்கு என்னால் செல்ல முடியவில்லை. தற்போது எனது உடல்நிலை சீராக உள்ளது. பனராஸ் பகுதிக்கு விரைவில் பிரச்சாரம் செய்யவுள்ளேன். உத்தரப்பிரதேசத்தில் உருவாகியுள்ள காங்கிரஸ் - சமாஜ்வாடி கூட்டணி வரவேற்கத்தக்கது. உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதாவுக்கு தலைவரே கிடையாது. பிரதமர் மோடி அங்கு அடிக்கடி பயணம் மேற்கொள்கிறார். ஆனால் அவரால் முதலமைச்சராக முடியாது என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.

ராகுல் காந்தி இன்னும் முதிர்ச்சி அடையவில்லை. அவருக்கு அரசியல் அனுபவமும் பக்குவமும் வர கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். இருப்பினும் கட்சியின் வளர்ச்சிக்காக அவர் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். விவசாயிகளுக்காக பேசும் ஒரே நபர் ராகுல் காந்தி மட்டும்தான். அவர் மனதில் உள்ளதை பேசக்கூடிய தலைவராக உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் அவர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பார். ராகுல் காந்தி இதுவரை பிரதமர் ஆகவில்லை. அந்த வாய்ப்பு அவருக்கு பிற்காலத்தில் கிடைக்கும்’ இவ்வாறு அவர் பேசினார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon