மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

தி.க. vs தி.மு.க : கருத்துப்போர்!

ஜெயலலிதா மறைவை அடுத்து, அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராகவும் சட்டப்பேரவைக் குழு தலைவராகவும் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆதரவளித்தார். இதைத் தொடர்ந்து, சசிகலா அதிமுக-வின் சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபின்னும் ஆளுநர் ஏன் சசிகலாவை முதல்வராகப் பதவியேற்க இன்னும் அழைக்கவில்லை என்று கி.வீரமணி கூறினார். கி.வீரமணியின் இந்தக் கேள்வி திமுக-வினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறை சென்றதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி தன்னை ஆட்சியமைக்க அழைப்புவிடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்று ஆளுநர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்றார். இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அரசுமீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சபாநாயகரிடம் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைத்தன. ஆனால் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்த நிலையில் திமுக-வினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். திமுக-வினரின் இச்செயல் குறித்து, கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று காலை தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட தீராத கறையாகும். எந்த அணிக்கும் ஆதரவில்லை என்று தொடக்கத்தில் கூறப்பட்ட நிலையோடு திமுக நின்றிருந்தால், இவ்வளவு மன வேதனையும் வெட்கப்படத்தக்க திமுக-வின் அரசியல் வரலாற்றில் களங்கம் ஏற்படும் நிலையும் ஏற்பட்டிருக்காது. சபாநாயகர் நாற்காலியில் அமர்வது, இருக்கையை உடைப்பது, அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு முற்றிலும் உரியதாக இல்லவேயில்லை. வெட்கமும் வேதனையும்பட வேண்டிய தலைகுனிவான நிலையும்கூட!’ என்று கூறியிருந்தார். கி.வீரமணியின் இந்தக் கருத்து குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ‘கி.வீரமணி ஒரு மூத்த தலைவர். அவரை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். மேலும் அவரைப் பின்பற்றி நடக்கிறோம். ஆகவே, நாங்கள் மிகவும் மதிக்கும் தலைவரின் குற்றச்சாட்டு குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை’ என்று கூறினார். இந்நிலையில், கி.வீரமணி திமுக-வை விமர்சித்து வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும்வகையில் முரசொலி பத்திரிகையில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கழக செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளரைச் சந்தித்தபோது ஒரு செய்தியாளர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி குறித்து ஒரு கேள்வியை எழுப்பினார்.

செய்தியாளர்: (சட்டமன்றத்தில் நடைபெற்ற ஒருசில விரும்பத்தகாத நிகழ்வுகளுக்காக) நீங்கள் வருத்தம் தெரிவித்திருந்தாலும் திராவிடர் கட்சிகளுக்கு தாய் கட்சியாக உள்ள திக-வின் தலைவர் கி.வீரமணி அவர்கள், ‘கலைஞர், வழிநடத்தாததே சட்டசபையில் இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் காரணம்’ என்று தெரிவித்திருக்கிறாரே?

மு.க.ஸ்டாலின்: திராவிடர் கழகத் தலைவர் ஐயா, வீரமணி அவர்கள் ஒரு மூத்த தலைவர். அவரை தலைவர் கலைஞர் மட்டுமல்ல; தலைவரைப் பின்பற்றி நடக்கும் நாங்களும் மிகவும் மதிக்கிறோம். ஆகவே, நாங்கள் மிகவும் மதிக்கும் ஒருவர் வைத்துள்ள குற்றச்சாட்டு பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை.

....இப்படி மிகப் பெருந்தன்மையுடன் உரிய மரியாதை அளித்து தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த பதில்; யார் மனதையும் புண்படுத்தவிரும்பாத இந்த பண்பட்ட பதில் - திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களைப் பாதிக்கும்வகையில் இருப்பதாக அக்கட்சியின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘தளபதியின் பதில், சுற்றி வளைத்து திராவிடர் கழகத் தலைவரை அவமதிக்கும் பதிலாக இருக்கிறது’ என்று, திரு.பூங்குன்றன் குறைபட்டுள்ளார். ‘மதிப்பு குறையும் என்றால், மதிப்பில்லா முறையில் வார்த்தைகளை - கருத்துகளை கையாள நேரிடும் என்பதுதானே அதன் பொருள்’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சுற்றி வளைத்து தளபதி பதில் கூறினாரா? அல்லது சுற்றி வளைத்து அதற்கு திரு.பூங்குன்றன் அவர்கள் பொருள் கொண்டாரா? என்பதை அவரது அறிக்கையைப் படித்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தி.மு.கழக செயல் தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது வாழ்த்தி வரவேற்றும், ஆக்கபூர்வ எதிர்க்கட்சிப் பணியை அந்த இயக்கம் தனது கடமை வழுவாது - அதன் பண்பட்ட எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறது... என (27.12.2016 ‘விடுதலை’யில் எழுதியதை) திரு.பூங்குன்றன் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

‘விடுதலை’ சுட்டிக்காட்டியுள்ள தலைமைப் பண்பை தளபதி ஸ்டாலின் மேலும், மேலும் நாளும் நாளும் வலுவேற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை இன்று நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்து பாராட்டி போற்றிக்கொண்டிருக்கின்றனர்.

‘பெரியார் மண்ணில் திராவிடர் இயக்கம் தவிர்த்த மூன்றாவது சக்தியாக காவிகள் காலூன்றக்கூடாது என்பதில் திமுக-வுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாதே - இருக்கவும் கூடாதே!

இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு - ஆளுநர் எப்படியெல்லாம் நடந்துவருகின்றனர். அதைப் பற்றிய கருத்துகளைக் கூற திமுக ஏன் தயங்க வேண்டும்?’- என்ற கேள்வியை திரு.வீரமணி சார்பில் திரு.பூங்குன்றன் எழுப்பியுள்ளார்.

திரு.பூங்குன்றன் அவர்களையும், வக்காலத்து இன்றி அதிமுக-வுக்காக வலிந்து ஆஜராகிக்கொண்டிருக்கும் பெருமதிப்பிற்குரிய வீரமணி அவர்களையும் (பெருமதிப்பிற்குரிய என்றதும் சுற்றி வளைத்துப் பொருள்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்) கேட்க விரும்பும் கேள்வி இதுதான்.

இந்தப் பிரச்சினையின்போது சசிகலா எப்போதாவது மத்திய அரசையோ, ஆளுநரையோ குற்றம்சாட்டி கருத்துக் கூறியது உண்டா? அதிமுக-வினர் திமுக-வை குற்றம்சாட்டினரே தவிர, பாரதிய ஜனதா பற்றி - வாய் திறந்தது உண்டா? திரு.பூங்குன்றன் விளக்குவாரா?

அதிமுக-வா அல்லது பிஜேபி-யா என்றால், அதிமுக-வுக்கு ஆதரவு, திமுக-வா அல்லது அதிமுக-வா என்றால் திமுக-வுக்கு ஆதரவு என்கிறீர்கள். தி.மு.கழகத்தின் மீது வீண் பழிபோட்டு, ‘திமுக என்ற பெயரே இல்லாது செய்துவிடுவேன்’ என்பவருக்கு ஆதரவாக ஆலோசனைகளை வழங்குகிறீர்கள். உங்களிடமிருந்து விலகி நின்றாலும், தந்தை பெரியார் மீது அழியாத பற்றும் திராவிட இயக்கக் கொள்கைகளை நெஞ்சில் நிறுத்தியும் செயல்படுபவர்களைக் கொண்டு தி.மு.கழகத்தின் ஓர் அமைப்பு, திராவிட இயக்க நூற்றாண்டு நிறைவு விழா எடுத்ததற்கு வேதனைப்படும் நீங்கள், ‘தி.மு.கழகம் என்ற பெயரே இல்லாது செய்வேன்’ எனச் சபதம் எடுக்கும் ஒரு கிரிமினலுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவிக்கிறீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றவர்களுக்கு ஏற்படாதா?

நீங்கள் யாருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறீர்கள் என்பதை எண்ணிப் பார்த்ததுண்டா? தமிழ்நாட்டு பொதுமக்கள் முற்றிலும் வெறுத்து வேரறுக்க நினைக்கும் ஒரு கூட்டத்திற்குத் துணைபோக உங்கள் மனம் எப்படி இடம் கொடுத்தது? அதன் சிதம்பரரகசியம்தான் என்ன?

தி.மு.கழகத்தைப் பொருத்தவரை, திருமதி.சசிகலா நடராஜன் கோஷ்டியையும் திரு. ஓ.பி.எஸ். கோஷ்டியையும் எதிர்க்கிறோம் என்பதை கழக செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தெளிவாகவே சுட்டிக் காட்டியிருக்கிறார்.

பெரியார் மண்ணில் திராவிட இயக்கம் தவிர்த்த மூன்றாவது சக்தியாக காவிகள் காலூன்றக் கூடாது என்று கூறிவிட்டு, திராவிடக் கழனியில் விளைந்துள்ள களைகளை நீர் ஊற்றி வளர்க்க முயற்சிப்பதை எப்படி பெரியாரின் - அண்ணாவின் தொண்டன் ஏற்பான்?.

தமிழ்நாட்டு உரிமைகளுக்காக மட்டுமின்றி, ஜனநாயக நெறிமுறைகள் காக்கப்படவும் - மாண்பு கெடாத மக்களாட்சி நடத்திடவும், சுயமரியாதைச் சுடரை தூக்கிப் பிடிக்கவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும், பெரியார் - அண்ணா வழியிலிருந்து என்றும் தடம் புரளாது பீடுநடை போட்டிடும் தி.மு.கழகம் என்பதை நாங்கள், எந்தவித உள் அர்த்தமுமின்றி, என்றென்றும் மதித்திடும் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு.பூங்குன்றன் அவர்கள் தனது அறிக்கையில், ‘மாறுபட்ட கருத்தைச் சொன்னால் அதை ஏற்கும் பக்குவம் உள்ளவர் அய்யா வீரமணி’ எனக் குறிப்பிட்டிருப்பதால் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளோம். இதை ஏற்பார் எனவும் எண்ணுகிறோம்’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

திராவிடக் கழகங்களின் தாய் கழகமான திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு தற்போது, இரு கழகங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் கருத்து மோதல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon