மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

எந்த அடிப்படையில் கூறுகிறார் ஸ்டாலின்? : தமிழிசை

எந்த அடிப்படையில் கூறுகிறார் ஸ்டாலின்? : தமிழிசை

தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும் என்று ஸ்டாலின் எந்த அடிப்படையில் கூறுகிறார் என, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழிசை சௌந்தரராஜன் நேற்று இரவு கோவை வந்தார். அப்போது இதுகுறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ‘ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி கோவைக்கு வருவதை ஒருசில அமைப்பினர் எதிர்ப்பதைக் கண்டிக்கிறோம். மகா சிவராத்திரி விழா பெரும்பான்மையான மக்கள் கொண்டாடப்படக்கூடிய நிகழ்ச்சி என்பதால் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சிக்கு வருகிறார்.

பெரும்பான்மை மக்கள் என்றவுடன் இதுபோன்ற எதிர்ப்புகள் வருகின்றன. பிரதமர் இந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறார். பிரதமர் வருவதை சிலர் காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்க்கின்றனர். பிரதமர் மோடி எதைச் செய்தாலும் விமர்சனம் செய்வதற்கு சிலர் இருக்கின்றனர். பிரதமர் மோடி சிவராத்திரி விழாவில் பங்கேற்க தமிழகம் வருவதை வரவேற்கிறோம்.

சட்டமன்றத்தில் திமுக நடந்துகொண்டது தவறு. விரைவில் திமுக ஆட்சி அமையும் என்பதை எந்த அடிப்படையில் ஸ்டாலின் கூறுகிறார்? சட்டமன்றத்தில் சபாநாயகர் ஜாதிப் பிரச்னையை கிளப்பியதும் தவறு. சட்டமன்றத்தின் மாண்பை இரண்டு திராவிடக் கட்சிகளும் மதிப்பதில்லை. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் கலாசாரம் இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

தமிழக அரசு 500 மதுக்கடைகளை மூடுவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம் மூடச்சொன்ன கடைகளை இன்னும் மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டுவர திமுக., அதிமுக., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம். அவர்கள் இந்த விவகாரத்தில் தவறு செய்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் இப்போது பாரதிய ஜனதாவை குற்றம்சாட்டுகின்றனர்’ இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon