மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

மல்லையா கடனை வசூலிக்க 13 சொத்துகள் ஏலம்!

மல்லையா கடனை வசூலிக்க 13 சொத்துகள் ஏலம்!

மும்பை நேபியன் கடற்கரைச் சாலையிலுள்ள நிலாத்ரி மாளிகை உட்பட விஜய் மல்லையாவின் 13 சொத்துகளை ஏலம் விட யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கிங்ஃபிஷர் தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் ரூ.9,000 கோடிக்குமேல் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாமல், இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை நாடு கடத்தும் முயற்சிகள் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் மும்பை நேபியன் கடற்கரைச் சாலையில் மல்லையாவுக்குச் சொந்தமன நிலாத்ரி மாளிகை உட்பட 13 சொத்துகளை ஏலம்விட முடிவு செய்துள்ளது.

மொத்தம் ரூ.680 கோடி மதிப்பிலான இந்த சொத்துகளில், நிலாத்ரி மாளிகை மட்டும் சுமார் ரூ.350 கோடி மதிப்புடையது. மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஸ்காட்லாந்து, ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ள மல்லையாவின் மற்ற சொத்துகளையும் ஏலத்தில் விட யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. மல்லையா இந்நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது, சந்தை விலையை விட 10 சதவிகிதம் குறைவாக இந்தச் சொத்துகளை வாங்க அவருக்கு ஓராண்டு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்தக் கெடு, கடந்த (பிப்ரவரி) 21ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ள நிலையில், இச்சொத்துகளை ஏலம் விடுவதற்கு யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்ட பிறகு, மல்லையாவால் இந்த நிறுவனத்துக்கு ஏற்பட்ட ரூ.4,000 கோடி கடனை ஈடுகட்டும் நோக்கில் இந்த சொத்துகள் ஏலம் விடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனமானது உலகின் 2ஆவது மிகப்பெரிய மதுபான தயாரிப்பு நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் உலகின் சுமார் 37 நாடுகளுக்கு மதுபானம் ஏற்றுமதி செய்கிறது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon