மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

டெட் தேர்வு : மார்ச் 6 முதல் விண்ணப்பிக்கலாம்!

டெட் தேர்வு : மார்ச் 6 முதல் விண்ணப்பிக்கலாம்!

டெட் என்னும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29, 30ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆசிரியர் பணியிடங்கள் தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, டெட் என்னும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஏப்ரல் 29ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஏப்ரல் 30ஆம் தேதியும் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், ஆசிரியர் நியமனம் தொடர்பான கூடுதல் மதிப்பெண் அளிக்க வகை செய்யும் அரசு உத்தரவு தொடர்ந்து நீடிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

டெட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கிடைக்கும். அதற்கான விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய். மார்ச் 6ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். மார்ச் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவுள்ள ஏப்ரல் 29, 30 தேதிகளில் டிஎன்பிஸ்சி 'குரூப் 7பி' மற்றும் 'குரூப் 8' பிரிவு தேர்வுகளும் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஏப்ரல் கடைசி வாரத்தில் பி.எட்., செய்முறை தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வு எழுதுபவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் டெட் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் குறைந்த நபர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனால், தமிழக அரசு இடஒதுக்கீடு முறையின்படி, தகுதிகாண் மதிப்பெண் சலுகை அளிக்க ஓர் அரசாணையையும், 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என மற்றொரு அரசாணையையும் வெளியிட்டது. அதை எதிர்த்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு காரணமாக கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவில்லை. அதைத் தொடர்ந்து அரசு வெளியிட்ட 2 அரசாணைகளும் செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon