மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

புறநகர் ரயில் விபத்து: பாதுகாப்புப் பணிகளை அதிகரிக்க அன்புமணி கோரிக்கை!

புறநகர் ரயில் விபத்து: பாதுகாப்புப் பணிகளை அதிகரிக்க அன்புமணி கோரிக்கை!

சென்னை புறநகர் ரயில் பயணத்தின் பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று, பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறித்தியுள்ளார்.

முன்னதாக, நேற்று சென்னை பரங்கிமலை அருகே புறநகர் ரயிலில் கூட்டம் நெரிசலால் ரயிலில் இருந்து தவறி விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், புறநகர் ரயில் சேவையை அதிகரித்து ரயில் பெட்டிகளின் எண்ணிகையை அதிகரித்தும் பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கும் தெற்கு ரயில்வே துறைக்கும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு சென்று கொண்டிருந்த புறநகர் தொடர்வண்டியில் படியில் தொங்கியபடி பயணம் செய்தவர்களில் 3 பேர் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் மேலும் 4 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர்.

தொடர்வண்டி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் விரைவில் நலம் பெற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை புறநகர் தொடர்வண்டிகளில் பயணம் செய்பவர்கள் மின் கம்பத்தில் மோதி உயிரிழக்கும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. தொடர்வண்டிப் பெட்டிகளில் இருந்து மிகவும் பாதுகாப்பான தொலைவில்தான் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தொடர்வண்டி பெட்டிக்கு வெளியில் 2 அடிக்கும் வெளியில் தொங்கும்போதுதான் மின் கம்பத்தில் மோதும் விபத்து நிகழ்கிறது.

புறநகர் தொடர்வண்டிகளில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், அதற்கேற்ற வகையில் தொடர்வண்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய தொடர்வண்டித்துறை இணையமைச்சர்களாக இருந்தபோதுதான் புறநகர் தொடர்வண்டி திட்ட மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு புறநகர் தொடர்வண்டி சேவை புறக்கணிக்கப்பட்டு வருகிறது. சென்னை-செங்கல்பட்டு வழித்தடத்திலும், சென்னை-அரக்கோணம் தடத்திலும் புதிய பாதைகள் அமைக்கப்படவில்லை. இதனால் தொடர்வண்டிகளில் அளவுக்கு அதிகமாக மக்கள் பயணம் செய்ய நேர்வதால்தான் இத்தகைய விபத்துகள் நிகழ்கின்றன.

அதுமட்டுமின்றி, தொடர்வண்டிப் பெட்டிகளில் கதவுகள் இருந்தாலும் கூட, நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அவற்றை மூட முடிவதில்லை. மெட்ரோ தொடர்வண்டிகளில் தானியங்கி கதவுகள் இருப்பதால், அவற்றில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதில்லை. மெட்ரோ தொடர்வண்டிகளில் பயன்படுத்தப்படுவது போன்ற பெட்டிகளை புறநகர் தொடர்வண்டிகளிலும் பயன்படுத்தலாம். புறநகர் தொடர்வண்டி பெட்டிகளின் பிரேக்குகள் காற்றழுத்தத்தில் இயங்குபவை என்பதால், காற்றழுத்தத்தைக் கொண்டே கதவுகளை மூட செய்யலாம். இதற்கு ஏற்றவகையில் தொடர்வண்டி பெட்டிகளின் இயக்கத்தை மாற்றி அமைக்கலாம். சென்னை மாநகரப் பேருந்துகளில் ஏராளமானவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதும், அவர்களில் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதும் ஒரு காலத்தில் வாடிக்கையாக இருந்தது. ஆனால் மாநகரப் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்ட பிறகு படிகளில் தொங்குவதும், விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதும் அறவே நின்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

எனவே, புறநகர் தொடர்வண்டி சேவைக்காக கூடுதல் பாதைகளை அமைத்தும், அதிகளவில் தொடர்வண்டிகளை இயக்கியும் நெரிசலைக் குறைத்தல், தொடர்வண்டிகளில் தானியங்கிக் கதவுகளை பொருத்துதல் ஆகியவற்றின் மூலம் புறநகர் தொடர்வண்டி பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு தெற்கு தொடர்வண்டித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவற்றுக்கெல்லாம், மேலாக படியில் நிற்பதை தவிர்ப்பதன்மூலம்தான் இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க முடியும் என்பதால், இதுதொடர்பாக பயணிகளிடம் எளிதில் மனதில் பதியும்வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தெற்கு தொடர்வண்டித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் குறிபிட்டுள்ளார்.

வெள்ளி, 24 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon