மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

பன்னீருடன் கூட்டணி : தீபா திடீர் தயக்கம்!

பன்னீருடன் கூட்டணி : தீபா திடீர் தயக்கம்!

ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அமைப்பு தொடங்குவது குறித்த முடிவை அறிவிப்பேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி இன்று பேரவையை தொடங்க உள்ளார். ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவதற்கு திடீரென தீபா தயக்கம் காட்டும் நிலையில், ஆர்.கே. நகர் நிகழ்ச்சியை அவர் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்த பின்னர், ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும், சசிகலா தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர் செல்வம் சசிகலா மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார்.

இதையடுத்து பல்வேறு தரப்பினர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து வந்த நிலையில், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும் ஓ.பன்னீர் செல்வத்தை ஜெயலலிதா சமாதியில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது பேட்டி அளித்த தீபா அதிமுக-வில் நானும், ஓ.பன்னீர்செல்வமும் இரு கரங்களாக இணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார். இதனால் அரசியல் களத்தில் இருவர் மீதும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ஜெயலலிதா பிறந்தநாள் அன்று ஆர்.கே.நகரில் பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அதில் ஓ.பன்னீர்செல்வமும், தீபாவும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவதற்கு திடீரென தீபா தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் கூறும்போது, “தீபாவின் இன்றைய நிகழ்ச்சி நிரலில் ஆர்.கே.நகர் பொதுக்கூட்டம் எதுவும் இதுவரை இல்லை” என்று தெரிவித்தனர்.

மேலும், ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி இன்று 24-ஆம் தேதி நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து தீபா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறுவதாவது,

காலையில் மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தீபா மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். பின்னர் வீட்டுக்கு திரும்பும் அவர் வீட்டு அருகே கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கு கேக் வெட்டி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகிறார். அதன்பிறகு தீபா தனது முடிவை அறிவிக்கிறார். அப்போது, தீபா பேரவையின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்யப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon