மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

டெலினார் நெட்வொர்க்கை வாங்கும் ஏர்டெல்!

டெலினார் நெட்வொர்க்கை வாங்கும் ஏர்டெல்!

ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடியான இலவச அறிவிப்புகளால் இழந்துவரும் தனது சந்தை மதிப்பை மீட்டெடுக்கும்வகையில் ஏர்டெல் நிறுவனம், டெலினார் நெட்வொர்க் நிறுவனத்தைக் கைப்பற்ற முடிவுசெய்து அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்திய தொலைதொடர்புச் சந்தையில், சமீப காலமாகவே கடுமையான போட்டி நிலவி வருகிறது. காரணம், கடந்த செப்டம்பர் மாதம் பல்வேறு இலவச அறிவிப்புகளுடன் சந்தையில் களமிறங்கிய ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்தான். அதன் தலைவர் முகேஷ் அம்பானி, வாய்ஸ் கால், டேட்டா உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசம் என்று அறிவித்ததால், ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட பிற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்வொர்க்குக்கு மாறத் தொடங்கினர்.

குறுகிய காலத்திலேயே 10 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்த ஜியோ, ஏப்ரல் முதல் தனது சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

எனினும், பிற நெட்வொர்க் நிறுவங்களைவிட 20 சதவிகிதம் கூடுதலான அளவில் டேட்டா உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியை சமாளிக்கும்விதமாக, பிற நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களது சேவையை விரிவுபடுத்தும்விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஐடியா மற்றும் ஏர்செல் நெட்வொர்க்குகள் இணைய முடிவுசெய்துள்ளன. அதேபோல, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஏர்செல் நிறுவனங்களும் இணைவதற்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல், டெலினார் நெட்வொர்க்கை கையகப்படுத்த முடிவுசெய்துள்ளது. நார்வே நாட்டைச் சேர்ந்த டெலினார் நெட்வொர்க் இந்தியாவில் டெலினார் இந்தியா என்ற பெயரில் நெட்வொர்க் சேவைகளை வழங்கி வருகிறது.

இந்தியாவின் ஆறு வட்டாரங்களில் டெலினார் நிறுவனத்தின் முழு சேவைகளையும் ஏர்டெல் நிறுவனம் கைப்பற்றவுள்ளது. ஒப்பந்தத் தொகை குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. முன்னதாக, கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளில் முதன்முறையாக நஷ்டமடைந்திருந்தது. அதேபோல, ஐடியா நிறுவனமும் இக்காலாண்டில் தனது முதல் வருவாய் இழப்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon