மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: பெண் குழந்தைகளுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்!

சிறப்புக் கட்டுரை: பெண் குழந்தைகளுக்கு எதிராக அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்!

சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரிப்பதற்கான காரணம் என்ன? பள்ளி, பணியிடங்கள், பயணங்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகின்றன. தொடரும் வன்முறைகள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் பெண் சமூகத்தை விட்டுவைப்பதில்லை.

ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து குற்றச் சம்பவங்களே ஊடகங்களில் வெளிவந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நாளொன்றுக்கு கணக்கற்று பெண்களுக்கு எதிராக பாலியல்ரீதியான குற்றச் செயல்கள் நடந்து வருகின்றன. அதிலும், கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி, கொடூரமாக தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு மரணமடைந்ததும், அதற்கெதிராக நாடெங்கும் போராட்டங்கள் பெருகின. இதைத் தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. அதன் பின்பாவது பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்துள்ளதா? இல்லை. எங்கு சென்றாலும் பாதிக்கப்படுகிறார்கள். எந்த ஆண்களையும் நம்பி பேசக்கூடாது என்ற நிலைமைக்கு நம் சமூகம் தள்ளப்பட்டு வருகிறது. முக்கியமாக, சிறுமி ஹாசினி கொலையை அடுத்து அக்கம்பக்கத்தினரிடம் பெண் குழந்தைகளை பழகவிடுவதற்குக் கூட பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி (17), என்ற சிறுமி பாலியல் ரீதியாக ஏமாற்றப்பட்டு மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன் மற்றும் இந்த குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய அவருடைய நண்பர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதிலும், முதலில் அவர்களைக் கைது செய்ய அலட்சியம் காட்டி பின், பல சமூக அமைப்பினர்கள் போராட்டம் நடத்தியபிறகே காவல் துறையினர். கைது செய்தனர். மணிகண்டன் நந்தினியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கர்ப்பமாக்கியுள்ளார். பின்பு, இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக நந்தினியை தனியே வரவழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, வயிற்றில் இருந்த 6 மாதக் கருவை அகற்றி மிகக் கொடூரமான முறையில் கொலை செய்தனர். இந்தக் கொடூர சம்பவம் காவல் துறை அலட்சியத்தால் வெளிவரவே இல்லை. இதற்கு பல்வேறு ஊடகங்களில் சமூக ஆர்வலர்களும், சினிமா பிரபலங்களும் நியாயம் கேட்டு வந்தனர். ஆனால் நந்தினிக்கு நியாயம் கிடைக்கும்முன்பே அடுத்த ஒரு கொடூரச் செயல் அரங்கேறியது. காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அடுத்த மதனந்தபுரம், மாதா நகரைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி ஹாசினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். குழந்தை என்றுகூட பாராமல் தஷ்வந்த் (23) என்ற இளைஞர் ஹாசினியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொலை செய்து, பின் சிறுமியின் உடலை ஒரு பையில் போட்டு எடுத்துச் சென்று தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் அனகாபுத்தூர் பாலத்தையொட்டி 100 மீட்டர் தூரத்தில் பையுடன் ஹாசினியின் உடலை எரித்துள்ளார். இந்தக் கொடூர சம்பவத்தையடுத்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தும், அதைத் தடுக்க தமிழக அரசு சார்பில் எந்த ஒரு துரித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் வலுத்தது.

இந்நிலையில், நடிகை பாவனா கடந்த வெள்ளிக்கிழமையன்று காரில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது கடுமையான அதிர்வலைகளை எழுப்பியது. இதுகுறித்து கேரள காவல்துறையினர் பாவனாவை அழைத்துச்சென்ற கார் ஓட்டுநர் மார்ட்டின் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு தென்னிந்திய திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தற்போது கர்நாடகாவில் முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவியை 5 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

ஏன், பெண்கள் மீது இவ்வாறு வன்முறையாக நடந்துகொள்கின்றனர்? குழந்தைகள் மீதும் பாலியல் வன்முறையில் ஈடுபடக் காரணம் என்ன? இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதுபற்றி பிரபலங்கள் இருவர் கூறிய கருத்துகள்:

லக்ஷ்மி பாய், உளவியல் நிபுணர்

ஆண்கள் தற்போது மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். படித்தவர்கள், ஏழைகள் என பாரபட்சம் பார்க்காமல் அனைவரும் தற்போது மது அருந்தி வருகின்றனர். இந்த நாளில், எத்தனை பேர் குடிக்காமல் இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. பெண் பார்க்கச் செல்பவர்கள் முதலில் ஜாதகம் பார்க்கிறார்களோ, இல்லையோ! அந்தப் பையன் குடிக்காமல் இருக்கிறாரா? இல்லையா? என்பதைப் பார்க்கின்றனர். இந்த குடிப் பழக்கம் ஆண்களை மற்ற குற்றச்செயல்களை எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் செய்யத் தூண்டுகிறது. இதுமட்டுமின்றி, இணையம் முதற்கொண்டு எல்லா இடங்களிலும் பாலியல் தொடர்பான காணொளிகளும் படங்களும் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும்வகையில் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பார்ப்பதும், கைபேசி மூலமாகவே சமூக வலைதளங்களில் முன்பின் அறியாதவர்களோடு எளிதில் தொடர்புகொள்ளக் கூடிய துரித வசதிகளும் ஆண்களுக்கு தவறான எண்ணங்களைத் தூண்டுகின்றன. இதனால் அவர்களுக்கு குழந்தைகளைக் கூட ஒரு வக்கிரப்புத்தியுடன் அணுகும் மனப்பான்மையை வளர்த்து அவர்களை வன்முறையில் ஈடுபட வைக்கிறது. பாலியல் வன்முறைகள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. ஆண்களுக்கு முறையான பாலியல் கல்வி சிறு வயதிலிருந்தே அளிக்கப்படாததும் மற்றொரு காரணம்.

இதுதவிர, நாடு முழுவதும் ஆண்கள் சிலர் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் ஆண்மைத்தன்மை குறைந்ததாக அவர்களுக்கு ஒரு தாழ்வுமனப்பான்மை தோன்றும். இதனால் பெண்களிடம் தங்கள் ஆண்மையை நிலைநாட்டுவதாக நினைத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடுகின்றனர். இந்த வன்முறைகள் வெளிச்சத்துக்கு வருவதே இல்லை. தற்கால கல்லூரி மாணவர்களும், பள்ளிச் சிறுவர்களும்கூட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இது, அவர்களுடைய உடல் நலத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் சமூக நோயாகவும் மாறி அடுத்த பாலினத்தின் மீதான வன்முறையில் முடிகிறது.

இதுமட்டுமின்றி, பாதிக்கப்படும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து வெளியே சொல்வதில்லை. நடிகை பாவனா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் வெளியே சொல்கிறார்கள் என்றால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சிலர் உள்ளனர். ஆனால் அன்றாடம் செத்து செத்துப் பிழைக்கும் சாமானிய பெண்கள் குறித்து சமூகத்தில் யாரும் பேசுவதில்லை. இதற்குக் காரணம், அவர்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்வதேயில்லை என்பதுதான். சமுதாயத்தில் நம்மை தவறாக நினைப்பார்களோ? திருமண வாழ்க்கை என்ன ஆகுமோ?, கணவர் என்ன நினைப்பாரோ?, வேலைபார்க்கும் இடத்தில் விட்டுக்கொடுத்துப் போகவில்லை என்றால் வேலை போவிடுமோ? என்ற பல சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதால் அவர்கள் வெளியே சொல்வதில்லை.

இதுதவிர, பெண் குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். இதனால் குழந்தைகளை கண்டுகொள்வதில்லை. குழந்தைகள் தொலைந்துபோவது வரை அவர்கள் என்ன செய்கிறார்கள்? யாருடன் பழகுகிறார்கள்? என்பது தெரிவதில்லை. குழந்தைகளிடம் அறிமுகமில்லாத நபர்கள் மட்டுமல்லாமல், குடும்பத்துக்குள் இருக்கும் நெருங்கிய உறவினர்களே இழிவாக நடந்துகொள்கின்றனர். இதை குழந்தைகள் வெளியே சொல்லத் தயங்குகின்றனர் அல்லது அஞ்சுகின்றனர்.

இதுகுறித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பெற்றோர்கள் குழந்தைகளிடம் யாரிடம் பழகுவது, ஆண்கள் தொடுகை குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும்.

விடலைப் பருவத்தில் இருக்கும் ஆண்களும், பெண்களும் ஈர்ப்பின் காரணமாக அதை காதல் என்று அர்த்தப்படுத்திக்கொள்வது தவறான நிகழ்வுகளுக்கு அவர்களை இட்டுச் செல்கிறது. பெற்றோர்கள் தங்கள் வேலைப்பளுவின் காரணமாக குழந்தைகளின் நடத்தைகளை கவனத்தில் கொள்வதில்லை.

இதனால்தான் இதுபோன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்களுக்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிப்பதன்மூலம் இந்த தவறுகளை சரி செய்ய முடியாது. ஒருமுறை தவறு செய்தவன் மீண்டும் நன்னடத்தையாக நடந்துகொள்வது மிகவும் கடினம். சிறையிலிருந்து வருபவன் மீண்டும் அதே தவறை செய்ய முயல்வான். எனவே, இதற்கு தற்போதுள்ள தண்டையைவிட கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களை விடுதலைக்குப் பிறகும் கண்காணிக்க வேண்டும். மேலும் சமீபத்தில் நடந்த போராட்டத்தில் காவல் துறையினர் நடந்துகொண்டவிதத்தை அடுத்து, அவர்கள் மீதுள்ள நம்பகத்தன்மையும் குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

கிரிஜஸ்ரீ - நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளினி

பாலியல் வன்முறை என்பது நடக்கக்கூடாத ஒன்று. ஆனால் தொடர்ந்து நடந்துகொண்டே வருகிறது. ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தவறுதலாக நடந்துகொண்டால் ஆண்களின் ஆணுறுப்பை வெட்டியெறியலாம் என்று சில நாடுகளில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பற்றி மூன்று வயதுக் குழந்தைக்கு என்ன தெரியும். 17 வயதுப் பெண் நந்தினி தொடங்கி ஹாசினி, ரித்திக்கா என்று குழந்தைகளைக்கூட விட்டு வைப்பதில்லை. பெண்கள்தான் கவர்ச்சியாக ஆடை அணிகிறார்கள் இதுபோன்ற தவறுகள் நடக்கிறது என்று கூறுகிறீர்கள், ஆனால் மூன்று வயது குழந்தையிடம் நீங்கள் என்ன கவர்ச்சியை கண்டீர்கள், மூன்று வயதுக் குழந்தை மீதும் ஏழு வயதுக் குழந்தை மீதும் உங்களுக்கு தவறுதலாக நடந்துகொள்ளத் தோன்றினால் அது உங்களுக்கு ஏற்பட்ட மன நோய். இந்த மன நோய்க்கு மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெறுங்கள். இதைத் தவிர்த்து, பெண்களையும் குழந்தைகளையும் கொடுமைப்படுத்தாதீர்கள். இதற்கு இன்னும் கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். பல விஷயங்களுக்காக நாம் போராடியிருக்கிறோம். எனவே, இந்த குழந்தைகளுக்காகவும் நாம் போராட வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது நாம் மெழுகுவர்த்தியை ஏற்றி அஞ்சலி மட்டுமே செலுத்துகிறோம். இதுபோன்ற கொடூர சம்பவங்கள் வரும்காலங்களில் நிகழாமல் இருக்க நாமும் இதற்கான விழிப்புணர்ச்சியை சமூதாயத்தில் ஏற்படுத்தப் பாடுபட வேண்டும்.

இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது குழந்தைகள் அதிலிருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் பயிற்சிகளும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும். ‘குட் டச்’, ‘பேடு டச்’ (Good touch, Bad touch) குறித்து நாம் கற்றுத்தர வேண்டும். ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாலியல்ரீதியான விஷயங்களை சொல்லித் தர வேண்டும்.மேலும் குழந்தைகளை நம் கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும் என்று கிரிஜஸ்ரீ கூறினார்.

-கவிபிரியா

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon