மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் மீதான தடை அறிவிப்பால், தேவை குறைந்து வைரத் தொழில் பாதிப்படைந்ததாக ’டி பியர்ஸ்’ (De Beers) நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பெர்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ’டி பியர்ஸ்’ நிறுவனம் வைர ஆய்வு, வைரச் சுரங்க வேலைகள், சில்லறை வைர விற்பனை, வைர வியாபாரம் மற்றும் தொழில்துறை வைரம் உற்பத்தி ஆகிய செயல்பாடுகளில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்துக்கு, கடந்த நவம்பர் மாதம் வெளியான பண மதிப்பழிப்பு அறிவிப்பால் இந்தியாவில் பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று இந்தியப் பிரதமர் அறிவித்ததைத் தொடர்ந்து நெஸ்லே, கோக், ஹிந்துஸ்தான் யூனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைப்போலவே உயர் மதிப்பு வர்த்தகமாகக் கருதப்படும் வைரத் தொழிலிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கடந்த 21ஆம் தேதி தனது வருடாந்திர வருவாய் விவரங்களை வெளியிட்ட ’டி பியர்ஸ்’ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவில் கடந்த ஆண்டின் மார்ச் மாதம் நகை விற்பனையானர்கள் நடத்திய நாடு தழுவிய போராட்டமும், நவம்பர் மாதம் வெளியான நோட்டுகள் மீதான அறிவிப்பும் வைரத்துக்கான தேவையை குறைத்துவிட்டன. எனவே, இத்தொழிலில் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவில் போதிய வருவாய் ஈட்டமுடியாதபோதிலும் ’டி பியர்ஸ்’ நிறுவனம் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் குறிப்பிடும்படியான வருவாய் ஈட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 2016ஆம் ஆண்டில் ’டி பியர்ஸ்’ நிறுவனம் 30 சதவிகித உயர்வுடன், 6.1 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில், ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டபின்னர், மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்கே செலவிட முக்கியத்துவம் அளித்ததால், நகைகள் வாங்குவது மற்றும் அதற்கான தேவை குறைந்துபோனது. அதாவது, நகைகளுக்கான தேவை 2016ஆம் ஆண்டில் 22 சதவிகிதம் சரிவடைந்து 514 டன்களாகக் குறைந்தது. முந்தைய 2015ஆம் ஆண்டில் அது 662.3 டன்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.