மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 15 ஆக 2020

டிராபிக் ராமசாமி வழக்கு ஒத்திவைப்பு!

டிராபிக் ராமசாமி வழக்கு ஒத்திவைப்பு!

தமிழக சட்டசபையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக்கோரி சமூகநல ஆர்வலர் டிராபிக் ராமசாமி கொண்டுவந்த வழக்கு விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிச்சாமி கடந்த வாரம் பதவியேற்றதையடுத்து, தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தீர்மானம் கொண்டு வந்தார். ரகசிய வாக்கெடுப்புக் கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதன் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் சமூகநல ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவில், "கடந்த 18 ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகள் மேற்பார்வையில் சட்டபேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். மேலும் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ வாகனங்களில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களின் புகைபடங்களை வைத்துள்ளனர். இதனை அனுமதித்தால் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குரு, அஜ்மல் கசாப் ஆகியோர் புகைப்படங்களை வைக்க அனுமதிக்கபடுமா?என்ற கேள்வி எழுகிறது. இது குறித்தும், சட்டசபையில் நடந்த நிகழ்வு குறித்தும் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி எச்.ஜி. ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யபட்ட மனுமீதும் வரும் திங்கள்கிழமை வழக்கு

விசாரணை வருகின்றது. அன்று இந்த மனுவையும் விசாரணை எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon