மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

சிறப்புக் கட்டுரை : தொலைந்து போகும் திரையரங்குகள்!

சிறப்புக் கட்டுரை : தொலைந்து போகும் திரையரங்குகள்!

சினிமா பாரடைசோ என்ற இத்தாலிய திரைப்படம். ஒரு திரைப்பட இயக்குனர் தன் இளம் வயதில் மிகவும் நேசித்த ஒரு திரையரங்கையும் அதன் ஆபரேட்டரையும் நினைத்துப் பார்ப்பதே படத்தின் கதை. படத்தில் வரும் அந்த இயக்குனருக்கு அந்தத் தியேட்டர் என்பது கல், மணலால் கட்டிய ஒரு கட்டடம் அல்ல. உயிருள்ள ஒரு ஜீவன். அதனால்தான், படத்தின் முடிவில் அந்தத் தியேட்டர் இடிக்கப்படும் போது அவரால் அழ முடிகிறது.

திரைப்படங்களுக்கு செல்வது திருவிழாக்களில் கலந்துகொள்ளக் கூடிய உணர்வளிப்பதாக இருக்கும். அதிலும் முதல்நாளே முன்னணி ஹீரோக்களின் படங்களை திரையில் காண்பது பற்றி கூறத் தேவையில்லை. நமக்கும் திரையரங்கத்துக்குமான நெருக்கம் மிக அதிகமானது என்றே கூறலாம். திரைப்படங்களையும் கதாநாயகர்களையும் கொண்டாடுவதில் தமிழனுக்கு நிகர் தமிழன் தான். திரையரங்கம் முழுக்க அலங்காரம் செய்து கதாநாயகனுக்கு கட்-அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்து திரைப்படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். மக்களின் இத்தனை கொண்டாட்டத்திலும் திரையரங்குக்கு பெரிய பங்கு இருக்கிறது. காலம் செல்லச் செல்ல தொழில்நுட்ப வளர்ச்சி திரையரங்குகளின் வீழ்ச்சிக்கு காரணமாக மாறியது. VCD, DVD மற்றும் இணையதளத்தின் வசதிகளால் திரையரங்கு செல்லும் வழக்கம் கணிசமாக குறைந்தது. அதுமட்டுமல்லாது இதற்கு பல காரணங்கள் கூறலாம். மனிதனின் ரசனை மாற்றம் மற்றும் கட்டண ஏற்றம் என பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். எங்கள் ஊரில் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து 6 திரையரங்குகள் இருந்தன, தற்போது ஒரே ஒரு திரையரங்கம் தான் இருக்கிறது. ஓம் சண்முகா, கிருஷ்ணா, SPM, சாந்தி, ரவி மற்றும் குரு என்ற ஆறு திரையரங்குகளில் தற்போது ரவி மட்டும் தான் மிச்சம். திரையரங்கம் என்பது மனிதர்கள் ஜாதி மதம் ஆகியவற்றை துறந்து தங்கள் கவலையை மறக்கவரும் இடமாக இருந்தது.

தொலைக்காட்சியினால் ஏற்பட்ட பாதிப்பு

தொலைக்காட்சியில் ‘ஒலியும் ஒளியும்’ பார்க்க ஒரு கூட்டம் காத்திருந்த காலம் போய் வீடு வீட்டுக்கு டிவி மற்றும் கேபிள் இணைப்பு என மக்களுக்கும் திரைப்படங்களுக்குமான நெருக்கம் அதிகரித்தது. மக்களுக்கும் திரையரங்குக்குமான நெருக்கம் குறையத் தொடங்கியது. தொலைக்காட்சி மற்றும் கேபிள் இணைப்பின் வருகையால் பெண்கள் அதிகம் கவரப்பட்டனர். தொலைக்காட்சி தொடர்களால் 90-களின் இறுதிக்குப் பின்னால் பெண்களின் கூட்டம் திரைப்படத்தை விடுத்து, தொலைக்காட்சித் தொடர்களில் தங்களை இணைத்துக் கொண்டனர். எனவே இயக்குநர்களும் பெண்களை மறந்து இளைஞர்களுக்காகவும், காதலர்களுக்காகவும் படம் எடுக்கத் தொடங்கினர். மேலும், VCD மற்றும் DVD ஆகியவற்றின் வரவால் எந்தப் படத்தையும் குறைந்த செலவில் மக்கள் வீட்டிலேயே பார்க்கத் தொடங்கினர்.

டிக்கெட் விலையேற்றமும் திரையரங்குகள் வீழ்ச்சியும்

முன்னேற்றமில்லாத நகரங்களில் 5, 10 ரூபாய் என டிக்கெட் விற்றுக்கொண்டிருந்த நேரம் திரைப்பட வணிகம் அதிகரித்தது. இதனால் படத்தின் விலை ஏற்றமடைந்ததை சிறிய திரையரங்குகளால் சமாளிக்க முடியவில்லை. இவை மெல்ல மெல்ல நகர்ந்து திடீரென முன்னேற்றமில்லாத நகரங்களை எட்டும் முன்னரே VCD, DVD-களின் ஆதிக்கம் அதிகரித்திருந்ததால் கட்டண ஏற்றத்தை அந்த மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 50 முதல் 70 ரூபாய் வரை டிக்கெட் விற்கப்பட்டதால் 30, 40 ரூபாய்க்கு DVD-ஐ வாங்கி மொத்த குடும்பமும் படம் பார்க்க தொடங்கினார்கள். இதனால் படத்தை வாங்கி ஓட்ட முடியாமல் எங்கள் ஊரில் நான்கு தியேட்டர்கள் காணாமல் போயின. ஓம் சண்முகா மற்றும் ரவி என்ற இரண்டு தியேட்டர்கள் மட்டுமே உயிர் தப்பியது. மற்ற திரையரங்குகள் இடிக்கப்பட்டு பெரிய வீடுகளாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாற்றப்பட்டது. தப்பிய இரு திரையரங்குகளில் ‘ஓம் சண்முகா’ நீண்ட நாள் நீடிக்க முடியவில்லை, அதனையும் மூடிவிட்டார்கள். கடைசியாக தனுஷ் இயக்கி நடிக்கும் ‘பவர் பாண்டி’ படத்தின் படப்பிடிப்புக்காக ‘ஓம் சண்முகா’ திரையரங்கின் கதவுகள் திறக்கப்பட்டன.

திரையரங்குகளை திண்ணும் பண முதலைகள்

இப்படியாக நலிந்து வரும் இந்த தொழிலை மொத்தமாக அடித்தட்டு மக்களிடமிருந்து பிரித்து பணக்காரர்கள் கையில் ஒப்படைப்பதற்கு அடித்தளமாய் விளங்குகிறது மால்கள். ஒரு திரைப்படத்தைக் காண குறைந்த பட்சம் ரூ.100 முதல் பார்க்கிங், சினாக்ஸ் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து 300 ரூபாய் வரை ஆகும். இதனால் திரைப்படம் என்பது பணம் படைத்தவர்களுக்கான தளமாக மாறிவிடும், பார்வையாளர்களாக இவர்கள் இருக்கும் பட்சத்தில் வெளிவரும் படங்களும் இவர்களுக்கானதாகவே இருக்கும். மால்களின் வளர்ச்சியால் மெல்ல மெல்ல அத்தனை திரையரங்குகளும் இடிக்கப்பட்டு வருகின்றன. இது திரைப்படக் கலையின் வீழ்ச்சிக்கு வித்திடும். ஆசியாவிலேயே பெரிய திரையரங்கம் என்று பெயர்பெற்ற ‘தங்கம்’ திரையரங்கம் தற்போது பெரிய ஜவுளிக் கடையாக மாறியுள்ளது. இதுபோல எண்ணற்ற திரையரங்குகள் நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் தொலைந்துகொண்டே இருக்கின்றன.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon