மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 21 ஜன 2020

மக்கள் விருப்பமே முக்கியம் : மத்திய அமைச்சர்!

மக்கள் விருப்பமே முக்கியம் : மத்திய அமைச்சர்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மத்திய அரசு அதை கவனத்தில் எடுத்துக் கொண்டு மக்கள் விருப்பத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே கூறியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே செய்தியாளர்களிடம் கூறியதாவது, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் காற்றில் மாசு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. காற்றில் மாசு அதிகரிப்பதை நாம் கட்டுப்படுத்தவேண்டும். சென்னை எண்ணூர் அருகே கடலில் கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு பற்றி மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையிடம் விரிவான அறிக்கை கேட்டு இருக்கிறோம். அந்த அறிக்கை கிடைத்தவுடன் சுற்றுச்சூழல் அமைச்சகம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிய வந்துள்ளது. மக்கள் இத்திட்டத்தை விரும்பவில்லை என்றால், அதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும்.

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் திட்டம் குறித்து கர்நாடக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்து உள்ளதா? என்று கேட்கிறீர்கள். ஆனால் அந்தத் திட்டம் தொடர்பான ஆவணங்கள் எதுவும் எங்கள் அமைச்சகத்துக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அவரை தொடர்ந்து சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் அஜய் நாராயண் ஜா கூறுகையில், எண்ணூர் அருகே கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனுப்பி வைத்தோம்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாசு கட்டுப்பாடு தொடர்பான நிறுவனம் ஒன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மூலம் தினசரி அடிப்படையில் விரிவான அறிக்கையை கேட்டு இருக்கிறோம். இது தவிர தமிழக அரசும், கடலோர காவல் படையும் எங்களுக்கு அறிக்கை அனுப்பி வருகிறார்கள். அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் முழுமையான தகவல் கிடைத்த பிறகு இது குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அஜய் நாராயண் ஜா கூறினார்.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon