மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் : ப. சிதம்பரம்

 சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் : ப. சிதம்பரம்

வட கிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள சிறப்பு ராணுவச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கலந்துகொண்டபோது கூறுகையில் , காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது இந்தச் சட்டத்தை திரும்பப் பெறாததற்காக வருத்தப்படுவதாக கூறினார். காங்கிரஸ் கட்சிக்குள்ளும், அதன் ஆட்சி முறைக்குள்ளும் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் நிலவியதே, இச்சட்டம் திரும்பப் பெறப்படாததற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறப்பு ராணுவச் சட்டம் மிகவும் கடுமையானது என்றும், மனிதத் தன்மையற்றது என்றும் தெரிவித்த சிதம்பரம், இதனைத் திரும்பப் பெறுவதன் மூலம் வட கிழக்கு மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை அளிக்க முடியும் என குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்புவதாகவும், அரசு அதனை கேட்டு நிவர்த்தி செய்வதாகவும் இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் வாரத்திற்கு ஒரு முறையாவது சந்தித்து பேச வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

துரதிருஷ்டவசமாக எதிர்க்கட்சிகளின் குரல்கள் ஒடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டிய சிதம்பரம், அறிவார்ந்த துறைகளில் பங்காற்றி வரும் நிறுவனங்கள், படித்தவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் அமைதியாக இருப்பது வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்தார். ஜனநாயக நாடான இந்தியாவில் அச்சமின்றி மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய சிதம்பரம், நாட்டு மக்கள் அச்சத்தில் மூழ்கக் கூடாது என கேட்டுக்கொண்டார். தனது இறுதி மூச்சு உள்ளவரை அச்சமின்றி கருத்துக்களை சொல்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon