மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

ஆமை முட்டைகள் : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி!

ஆமை முட்டைகள் : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி!

கடந்த சில ஆண்டுகளாக ஒடிசா மற்றும் ஆந்திர கடற்கரைகளில் ஆமைகள் இறந்து மிதப்பது கவலையை ஏற்படுத்தியிருந்தது. அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை ஆமைகள் சட்டவிரோத மீன்பிடிப் படகுகளின் வலைகளில் சிக்கி உயிரிழந்துவந்தன. இந்நிலையில், ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள் ஒரு வாரத்தில் சுமார் 3.55 லட்சம் முட்டைகளை இட்டுள்ளது .

இதுகுறித்து பெர்ஹாம்பூர் பிரிவு வன அதிகாரி ஆஷிஷ் குமார், ‘கஞ்சம் கடற்கரையில் ஒரு வாரத்தில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் சுமார் 3,55,000 முட்டைகளை இட்டுள்ளது. கடந்த ஆண்டு, இந்த ஆமைகள் 3,09,000 முட்டைகள் மட்டுமே இட்டிருந்தன. தற்போது நாங்கள் முட்டைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். முட்டைகளின் எண்ணிக்கை மேலும் 4 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை கணக்கெடுக்கப்பட்ட அறிக்கை மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்போது ஆமைகள் முட்டைகளை அடைகாப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு கொடுத்திருக்கின்றனர். மேலும் ஆமைகளை பாதுகாக்க கடலில் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையின்படி, ஆமைகள் 3.55 லட்சம் முட்டைகளை இட்டுள்ளன. இதனால், அழிவிலிருந்து ஆமைகளை பாதுகாக்க முடியும். இந்தச் செய்தி சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

வியாழன், 23 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon