மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 பிப் 2017

சிறப்பு கட்டுரை: நாளை உலகம் - கம்ப்யூட்டருக்கு வரும் காய்ச்சல்

சிறப்பு கட்டுரை: நாளை உலகம் - கம்ப்யூட்டருக்கு வரும் காய்ச்சல்

தொண்ணூறுகளில் இந்தியாவில் கணினி மெல்லப் பரவ ஆரம்பித்திருந்தது. நான் படித்த கல்லூரியில் கம்ப்யூட்டர் லேப் உள்ளே நுழைவது, கோவிலில் நுழைவது போன்ற ஒரு செயல். வெளியில் இருக்கும் ஒரு இரும்பு அலமாரியில் உங்கள் காலணிகளை கழற்றி வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். கல்லூரியில் ஹாஸ்டல் மாணவர்கள் தங்கள் சாக்ஸ்களை தீபாவளி, பொங்கல் என்று விசேஷங்களுக்கு ஒரு முறைதான் துவைக்கவோ, மாற்றவோ செய்வார்கள் என்பதால், அந்த அலமாரியின் ஒருசில மீட்டர்கள் தூரத்துக்கு எந்த ஜீவராசிகளும் உலவ முடியாது. உள்ளே இயங்காத கணினிகளை பத்திரமாக உறையிட்டு மூடிவைத்திருப்பார்கள். மானிட்டருக்கு ஒரு உறை. சிபியூ-வுக்கு ஒரு உறை. லேப் உதவியாளர் பயபக்தியுடன் அதைத் திறப்பார். பவ்யமாக மடித்து வைப்பார். கன்னத்தில் போட்டுக்கொள்ளாதது ஒன்றுதான் பாக்கி. அறை ஏ.சி. செய்யப்பட்டிருக்கும். பிரின்சிபால் அறைக்குக்கூட இல்லாத ஏ.சி. இத்தனை மரியாதையுடன் இந்தக் கணினிகளை ஏன் பாதுகாத்தார்கள் என்பது ஒரு புரியாத புதிர். ஒருமுறை அங்கேயிருந்த உதவியாளரிடமே அந்த சந்தேகத்தைக் கேட்டேன். ‘சுத்தபத்தமா இல்லைன்னா வைரஸ் தாக்கிருமாம்பா... அப்புறம் கம்ப்யூட்டர் மொத்தமா கெட்டுப் போயிருமாம்’ என்றார். இதில் கொடுமை என்னவென்றால், அந்தக் கல்லூரியின் கரஸ்பாண்டென்ட் கூட அதை நம்பியிருந்தார். சளி, காய்ச்சல் இருப்பவர்களை லேப் உள்ளே விடவேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு வேறு.

நிஜத்தில் மனிதர்களைத் தாக்கும் வைரஸ் என்பது என்னவென்பது இன்னும் விஞ்ஞானிகளுக்கே தெளிவில்லாத விஷயம். இவை உயிருள்ளவையா, ஜடப் பொருள்களா என்ற விவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தனியாக இருக்கும்போது உயிரற்ற மூலக்கூறுபோல ‘தேமே’ என்று இருக்கும் வைரஸ், ஒரு உயிருள்ள உடம்புக்குள் நுழைந்தால் தன்னைத்தானே பிரதியெடுக்கும் ஒரு செல் உயிரிபோல் மாறி விடுகிறது. அதுவரை இதற்கு வளர்சிதை மாற்றம், உணவு, தண்ணீர், இறப்பு என்று எதுவும் கிடையாது. கணினியைப் பாதிக்கும் வைரஸ்கள் கிட்டத்தட்ட இப்படித்தான். தனியாக இருக்கும்வரை அவற்றால் எந்தவிதத்திலும் செயல்பட முடியாது. ஒரு கணினிக்கு உள்ளே தனக்குச் சாதகமான சூழலில்தான் அவை செயல்பட்டு அதிக பாதகத்தை விளைவிக்கும். ஆனால் வைரசும் ஏனைய கணினி மென்பொருட்களைப் போன்ற இன்னொரு மென்பொருளே. மனிதனைத் தாக்கும் வைரஸ்களை உருவாக்கியவர் கடவுள். கணினியைத் தாக்கும் வைரஸ்களை உருவாக்குபவன் மனிதன்.

இந்த வைரஸ்களை யார் உருவாக்குகிறார்கள். இதனால் அவர்களுக்கு என்ன சந்தோஷம் கிடைக்கிறது என்ற கேள்வியெழுகிறது. எதற்காக ‘சிவனே’ என்று இருக்கும் ஒரு கணினியைக் கெடுக்க வேண்டும்? பொதுக் கழிப்பிடத்தில் இருக்கும் யூரினல்களை யாரோ இரும்புக்கழியால் அடித்து உடைத்துவிட்டுப் போயிருப்பார்கள். அவர்கள் எதற்காக அதைச் செய்கிறார்கள் என்று உளவியல் சார்ந்து ஆராய்ந்தால், ஏதோ ஒருவகையில் அவர்கள் சமுதாயத்தை வெறுப்பவர்களாக இருப்பார்கள் அல்லது அதன் கட்டுப்பாட்டை வெறுப்பவர்களாக இருப்பார்கள். உடைப்பது, அழிப்பது தங்களுடைய வல்லமையைக் காட்டுவதாக அவர்கள் நம்புகிறார்கள். கம்ப்யூட்டர் வைரஸ் எழுதுவதற்கு நல்ல கம்ப்யூட்டர் அறிவு தேவை. இருப்பதிலேயே சிறந்த புரோக்ராமர் ஒருவரால்தான் சிறந்த வைரஸ் ஒன்றை எழுத முடியும்.

ஏதோ ஒருவகையில் ஒரு கம்ப்யூட்டரில் நுழையும் வைரஸ் முதலில் தன்னைத்தானே பிரதியெடுத்துக் கொள்கிறது. அதன்பின், தன்னைக் கண்டுபிடித்து அழிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்கிறது. அதன்பிறகு தன்னுடைய கட்டளைகளுக்கேற்ப உங்கள் கணினியில் உள்ள ஃபைல்களை அழிக்கவோ, மாற்றியமைக்கவோ செய்யும். சில வைரஸ்கள் உங்கள் தொடர்பில் உள்ள ஈ-மெயில் முகவரிகளுக்கு தன்னைத்தானே அனுப்பிக் கொள்ளும் திறமை படைத்தவை. தெரிந்தவரிடமிருந்து வரும் மெயில் என்று எதார்த்தமாகத் திறந்தால் அவர்கள் வீட்டு கம்ப்யூட்டரில் இது குடியேறிவிடும். பிறகு, அங்கிருந்து அவர் தொடர்புகளுக்குச் செல்லும். சில நாட்களில் சங்கிலித் தொடராக லட்சக்கணக்கான கணினிகளில் இது சென்று தங்கிவிடும். சில வைரஸ்கள், ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை தொடர்ந்து அணுக முயற்சி செய்யும். இந்த வைரஸ் மேலும் மேலும் பல கணினிகளில் பெருகும்போது அந்த இணையதளத்துக்கு செயற்கையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அது செயலிழந்துவிடும். கணினி வரலாற்றில் பெரும் சேதம் விளைவித்த சில முக்கியமான வைரஸ்களை இப்போது பார்க்கலாம்.

ஐ லவ் யூ என்று அழைக்கப்பட்ட வைரஸ்தான் எண்ணிக்கை அடிப்படையில் கம்ப்யூட்டர்களில் அதிகம் பரவிய ஒரு வைரஸ் என்று கருதப்படுகிறது. ஐ லவ் யூ என்ற தலைப்புடன் உங்களுக்கு ஒரு ஈ-மெயில் வரும். அதில் ‘காதல் வாக்குமூலம்’ என்று பெயரிடப்பட்ட டெக்ஸ்ட் ஃபைல் இணைந்திருக்கும். விண்டோஸ் கணினியில் கோப்புகளின் எக்ஸ்டென்ஷன்கள் காட்டப்படாத காலம் அது. தெரிந்த நபரிடமிருந்து வந்திருக்கிறதே என்று நீங்களும் ஆர்வத்துடன் திறந்தால் அது, ஒரு வைரஸாக உங்கள் கணினியில் பரவி அத்தனை கோப்புகளையும் அழித்து அந்த இடத்தில் தன்னை நிரப்பிக்கொள்ளும். இதன் காரணமாக, உங்கள் கணினியை நீங்கள் திரும்ப பூட் செய்யக்கூட முடியாத நிலை உண்டாகும். உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தானாகவே ஐ லவ் யூ என்ற தலைப்பில் இணைப்புடன் மெயில்கள் பறந்திருக்கும். அவர்களும் தெரிந்தவர் அனுப்புகிறார் என்று திறந்து பார்ப்பார்கள். வெளியான சில மாதங்களிலேயே ரூ.68000 கோடி அளவுக்கு நாசத்தை ஏற்படுத்தியது இந்த வைரஸ். இது வெளியான 2000ஆவது ஆண்டில் உபயோகத்தில் இருந்த 10% கம்ப்யூட்டர்களை இது நாசப்படுத்தியது. அது ஒரு பெரிய எண்ணிக்கை.

இதைப் போலவே பெரிதும் பேசப்பட்டது மெலிசா என்று அழைக்கப்பட்ட வைரஸ். மைக்ரோசாஃப்ட் வேர்டு ஃபைலாக இது ஈ-மெயில் மூலம் வரும். நிறைய பப்பிஷேம் தளங்களின் இலவச பாஸ்வேர்டுகள் இதனுள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும். சபலத்தோடு திறந்தால் உங்கள் தொடர்புப் பட்டியலில் இருக்கும் ஐம்பது பேருக்கு இது தன்னைத்தானே அனுப்பிக்கொள்ளும். இது பரவிய வேகத்தில் பல அரசாங்கத் துறைகள் தங்கள் ஈ-மெயில் சர்வரையே நிறுத்திவைக்கவேண்டிய நிலை வந்துவிட்டது.

இதுவரை வந்த வைரஸ்களில் மிகவும் முன்னேறியதாகக் கருதப்படுவது ஸ்டக்ஸ்நெட். இஸ்ரேல் உளவு நிறுவனம் உருவாக்கிய இது, வைரஸ்களின் வரலாற்றில் முதன்முறையாக கணினிகளைத் தாண்டி ஈரானின் அணு உலைகளைத் தாக்க உருவாக்கப்பட்டது. இவற்றை உருவாக்கியவர்கள் குறிப்பாக, அணு உலைகளை இயக்கும் சீமென்ஸ் என்ற நிறுவனத்தால் செய்யப்பட்ட கட்டுப்பாட்டுக் கருவிகளை மட்டும் தாக்கும்வகையில் உருவாக்கினார்கள். அப்படி எந்தக் கருவிகளும் கணினியுடன் இணைந்திருக்கவில்லை என்றால் இது எந்த அட்டகாசமும் செய்யாமல் அமைதியாக இருக்கும். இதன் காரணமாக, இதைக் கண்டறிந்து நீக்குவதும் கடினமான செயல். சீமென்ஸின் கருவி இணைக்கப்பட்டால் இது உடனே உயிர்பெற்றுவிடும். இதற்காக, அது கணினிகளில் ஆண்டுக்கணக்கில்கூட காத்திருக்கும். அதன்பிறகு அந்த அணு உலைக் கருவிகளின் வேகத்தைக் கூட்டி அதனால் அவை செயலிழக்கும்படி செய்யும். இதனால் ஈரானின் 20% அணு உலைகள் பாதிக்கப்பட்டன. ஒரு கம்ப்யூட்டர் வைரஸ் உலகை அழிப்பதற்கு வெகு அருகில் சென்ற நிகழ்வு இது. இந்திய அணு உலைகளும் பாதிக்கப்பட்டன என்கிறது சிமான்டெக் என்ற வைரஸ் எதிர்ப்பு நிறுவனம்.

சில நேரங்களில் வைரஸ்கள் மாறுவேடமிட்டும் வரும். அவற்றை ட்ரோஜன்கள் என்று அழைக்கிறார்கள். தாராளமனதோடு உங்களுக்கு இலவசமாக ஒரு மென்பொருளை அளிப்பார்கள். வெளிப்பார்வைக்கு அது உங்களுக்கு ஒரு டோரண்டாகவோ, தரவிறக்கங்களை நிர்வகிக்கவோ உதவும். நீங்கள் மகிழ்ச்சியாகப் பயன்படுத்துவீர்கள். பின்னணியில் தனது வேலையைக் காட்டும். உங்கள் அத்தனை கீ போர்டு அழுத்தங்களையும் பதிவுசெய்து யாருக்கோ தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும். அது, உங்கள் வங்கியின் கடவுச் சொல்லாகவும் இருக்கும். ஒருபுறம் இலவசமாகக் கிடைக்கிறது என்று வாங்கி வைத்துக்கொண்டால், இன்னொருபுறம் உள்ளாடை முதற்கொண்டு களவு போய்விடும் என்பது அரசியலில் மட்டுமல்ல; ட்ரோஜன்கள் விஷயத்திலும் பொருந்தும்.

இது ஒருபுறமிருக்க, உலகத்தில் இப்போது மொபைல் பயனாளர்களின் எண்ணிக்கை வெடித்துப் பரவிக்கொண்டிருக்கிறது. வைரஸ் உருவாக்குபவர்களின் கவனம் நிறையவே அந்தப் பக்கம் திரும்பியிருக்கிறது. ‘ஹம்மிங்பேர்டு’ என்ற வைரஸ், சைனாவிலிருந்து கிளம்பி இதுவரை 1 கோடி ஆண்டிராய்டு போன்களுக்குள் நுழைந்திருக்கிறது. இதன்பின்னால் 25 பேர் கொண்ட நிறுவனமே இயங்குகிறதாம். உங்கள் போன்தான் இனிமேல் டிஜிட்டல் பணப்பை என்று இந்திய அரசு சொல்கிறது. அப்படியானால், எந்த மாதிரியான ஆபத்தில் இருக்கிறோம் என்று சிந்தித்துக் கொள்ளலாம். வைரஸ் எழுதுபவர்கள் முன்னேறிவிட்டார்கள். அவர்கள் அந்தக் காலம்போல் உங்கள் கருவிகளை பாழ்படுத்துவதில்லை. வலிக்காமல் உங்கள் டேட்டாக்களை மட்டும் பின்வாசல் வழியாக கடத்திவிடுகிறார்கள். எனவே, அவை கண்டுபிடிக்கப்படாமலே நீண்டகாலத்துக்கு உங்கள் கையில் இருக்கும் மொபைல் போனில் தொடர்ந்து வாழ முடியும்.

அப்படியானால் இவற்றிலிருந்து எப்படித் தப்பிப்பது என்ற கேள்வி எழலாம். முழுவதுமாக தப்பிப்பது இயலாத காரியம். ஆனால் கவனமாக இருந்தால் பல நேரங்களில் சேதங்களைத் தவிர்க்கலாம். இலவசமாகக் கிடைக்கிறது என்று மென்பொருட்களை கணினியில் குவித்துவைக்காதீர்கள். பெரும்பாலும் டோரண்ட் டவுன்லோடர்கள் உங்கள் கணினியின் கதவுகளைத் திறந்துவிட்டு அதை வேட்டைக் காடாக்கும். போர்ன் தளங்களைப் பார்க்க வேண்டாம் என்று சொன்னால் கேட்கமாட்டீர்கள். ஆனால் அனைவரும் அறிந்த தளங்களை மட்டும் பாருங்கள். தேவையில்லாமல் செயலிகளையோ, கேம்களையோ உங்கள் மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ளாதீர்கள். அப்படியே செய்தாலும் அனைவரும் நன்கு அறிந்த செயலிகளை மட்டும் செய்யலாம். உங்களுக்கு அறிமுகமானவர்களாகவே இருந்தாலும், சம்பந்தமில்லாத ஈ-மெயில்களில் ஒட்டிக்கொண்டு வரும் இணைப்புகளைத் திறக்காதீர்கள். பெரும்பாலும் கடையில் கொடுத்து ஒரு ஆண்ட்ராய்டு போனை அன்லாக் செய்துதரச் சொன்னால் அவர்கள் அதை ரூட் செய்துவிடுவார்கள். அப்படிச் செய்தால் இதுபோன்ற வைரஸ்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது மாதிரி.

இலவச மென்பொருளாகவோ, கிளுகிளுப்பு வீடியோவாகவோ, புத்தம் புதிய ஐபோன் பரிசாகவோ பெரும்பாலும் இந்த வைரஸ்கள் மனித மனதின் சபலத்தைப் பயன்படுத்தியே கணினிக்குள் அல்லது மொபைலுக்குள் நுழைகின்றன. எதுவுமே இலவசமில்லை இங்கே.

கட்டுரை 1 – ‘கிட்னி’தானே செஞ்சுக்கலாம் விடுங்க!

கட்டுரை 2 – ‘நான் எங்கே இருக்கேன்’

கட்டுரை 3 – ‘இதைக் கண்டவுடன் ஷேர் செய்யவும்’

கட்டுரை 4 – ‘வீட்டுக்குள் வந்த விடுதி’

கட்டுரை 5 – ‘விமானமா? அது ஸ்லோவா போகுமே!’

கட்டுரை 6 – ‘'எண்ணெய் உண்ணும் பாக்டீரியாக்கள்'

கட்டுரையாளர் குறிப்பு:

ஷான் கருப்பசாமி என்ற பெயரில் எழுதி வரும் இவரது இயற்பெயர் சண்முகம். சென்னையில் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப இயக்குநராகப் பணிபுரிகிறார். இணையத்தைத் தாண்டி இவருடைய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், முல்லைச்சரம், மற்றும் கணையாழி ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன.“விரல் முனைக் கடவுள்”, “ள்”என்ற கவிதைத் தொகுப்புகளை அடுத்து “ஆண்ட்ராய்டின் கதை” என்ற தொழில்நுட்பம் சார்ந்த நூலும் வெளியாகியுள்ளது.அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்துப் பேசுவதும் எழுதுவதும் ஒரு மொழியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்பதால் அப்படியான கட்டுரைகளைத் தொடர்ந்து தமிழில் எழுதி வருகிறார்.

மின்னம்பலம் இணைய தளத்தில் “நாளை உலகம்” என்ற தலைப்பில் தொடர்ந்து தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகளை சில வாரங்களுக்கு எழுத இருக்கிறார்.

Email - [email protected]

Phone – +919884091216

Twitter - shanmugame

Facebook – Shan Karuppusamy

செவ்வாய், 14 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon