மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: திருப்பூர் - தத்தளிக்கும் தொழில் நகரம்! - பி.வி.ஸ்ரீவித்யா

சிறப்புக் கட்டுரை: திருப்பூர் - தத்தளிக்கும் தொழில் நகரம்! - பி.வி.ஸ்ரீவித்யா

திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்களிடம் தொடர்புகொண்டு, ஆடை தயாரித்து அனுப்புகின்றன. அவற்றுக்கு, வெளிமாநிலத்தவர்களிடமிருந்து தொகையை, வங்கிக் கணக்குவாயிலாக பெறுவது வழக்கம். மத்திய அரசு பழைய, 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. வங்கிகள்வாயிலாக புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுகிறது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு, தொழிலாளர்கள் வங்கிகளுக்குச் செல்வதால், நிறுவனங்களுக்கு வருகை குறைந்து, ஆடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதால், ஜவுளித் தொழிலையே நம்பி வாழும் பெரும்பான்மையான திருப்பூர்வாசிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

வெங்கடாசலம் (50) என்பவர், திருப்பூர் நகரின் சாமுண்டிபுரத்தில் பின்னலாடை ஆலையை செயல்படுத்தி வருகிறார். தினசரி காலை 6 மணிக்கு ஆலைக்குச் செல்லும் வெங்கடாசலம் ஆலையை கண்காணிக்கிறார். அவரிடம் 16 நூற்பு எந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து, 8.15 மணிக்கு மேலாக அங்கு பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களும் வரத்தொடங்குகின்றனர். கடந்த வாரத்துக்கு முன்புவரையில் நூற்பு எந்திரம் ஒவ்வொன்றுக்கும் இருவர் என்றவீதத்தில் பணியாற்றினர். அவர்களுக்கு வாராவாரம் சனிக்கிழமைகளில் தலைக்கு ரூ.3,000 ஊதியமாக வழங்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டுகள்மீதான தடையைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை முதல் வெங்கடாசலம் தனது ஊழியர்களுக்கான கால அளவை ஒரு ஷிஃப்டாக குறைத்துக் கொண்டார். ஒருநாள் விட்டு ஒரு நாள் என்ற அடிப்படையில் ஒரு எந்திரத்துக்கு ஒருவரை மட்டும் நியமித்துள்ளார் அவர். அவர்களது ஊதியம் தற்போது ரூ.1,500 ஆகக் குறைந்துவிட்டது.

சமீபத்தில் இவருக்கு எந்த புதிய ஆர்டரும் வரவில்லை. தீபாவளி சமயத்தில் வந்த ஆர்டர்களில் மீதமிருந்த நூற்பண்டல்களையே தற்போது நூற்று ஆடைகளாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். வழக்கமாக, வாரத்துக்கு 1,500 கிலோ அளவிலான ஆடையை உற்பத்தி செய்துவந்த இவர், கடந்த வாரம் 600 கிலோ மட்டுமே உற்பத்தி செய்திருக்கிறார். பணப் பரிமாற்ற பிரச்னைக்குப் பிறகு, தன்னால் கையில் பணமில்லாமல் எந்திரங்களை இயக்க முடியாது என்கிறார் வெங்கடாசலம். காசோலைகள் மூலமாக இவர் செட்டில்மெண்ட் பெற்றாலும், தனது ஊழியர்களுக்கு கையில் பணமாகவே சம்பளம் கொடுக்கிறார் இவர். இதுவே வெங்கடாசலத்தின் நிலை.

திருப்பூரின் பாண்டியன் நகரத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சக்திவேல் என்பவரின் ஆலை. ஆலை என்பதைவிட, இவர் தங்கியிருக்கும் இடத்தை இரண்டாகப் பிரித்து அதில் ஒரு பகுதியில் சட்டை மற்றும் டி-சர்ட்டுகளின் காலர்களில் பயன்படுத்தப்படும் துணியை வெட்டும் பணியை மேற்கொள்கிறார். இவரிடம் ஆர்டருக்கு வந்த கடைசிப் பண்டலும் தற்போது முடிந்துவிட்டது. அது, தீபாவளிக்கு வந்த ஆர்டரில் எஞ்சியது. இந்தத் துணியை வெட்டும் எந்திரத்தில் பெட்ரோல் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. நோட்டுகள்மீதான தடையைத் தொடர்ந்து சக்திவேல் பெட்ரோல் வாங்கச் சென்றபோது 500 ரூபாய்க்கும் பெட்ரோல் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகக் கூறுகிறார்.

இந்த துணி வெட்டும் ஆலையைத் தவிர சக்திவேல், துணி தைக்கும் தொழிலையும் நடத்தி வருகிறார். அவரிடம், அவரது மனைவியையும் சேர்த்து ஏழுபேர் துணி தைக்கும் வேலை பார்க்கின்றனர். ஏழுபேர் இருந்த இடத்தில் தற்போது நான்குபேர் மட்டுமே துணி தைக்கின்றனர். மூவரை சில தினங்களுக்குமுன்னர் வேலைக்கு வரவேண்டாம் என்று கூறியதாகவும், தன்னிடம் பழைய நோட்டுகளே உள்ளன என்றும், சம்பளம் தருவதற்கு புதிய ஆர்டர்களும் கிடைக்கவில்லை என்கிறார் சக்திவேல்.

ஆர்டர் கிடைக்காததால் தனது தொழிலை தற்காலிகமாக நிறுத்த சக்திவேல் முடிவெடுத்திருக்கிறார். அவரது வீட்டு வாடகை, இந்த ஆலையுடன் சேர்த்து ரூ.11,000. தவணை, கடந்த 10ஆம் தேதியே முடிந்துவிட்டநிலையில் தன்னிடம் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளே உள்ளதாகவும், வீட்டு ஓனர் வாங்க மறுத்ததாகவும் சக்திவேல் கூறுகிறார். வங்கிக்குச் சென்றால் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டுமே என்பது இவரது இன்னொரு கவலை. சக்திவேலுக்கு ஆர்டர் கொடுத்த இரண்டு சப்ளையர்கள் தங்களது குடோன்களை மூடிவிட்டதாகவும், அவர்கள் தனக்கு தலா ரூ.20,000 மற்றும் ரூ.30,000 தரவேண்டியுள்ளது என்கிறார் கனத்த மனத்துடன்.

சக்திவேலிடம் வேலைபார்ப்பவர்களில் அபுபக்கர் மூத்தவர். இவர், தனது வாரச் சம்பளத்தை தினமும் ரூ.200 என்ற விகிதத்தில் பெற்றுச் செல்கிறார். அதில் குடும்பத்தினர் நால்வருக்குச் சமைக்க 2 கிலோ அரசி மற்றும் இதர மளிகைப் பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் கடந்த புதன்கிழமை அபுபக்கருக்கு ரூ.500 ஊதியமாக கொடுக்கப்பட்டது. வேறுவழியின்றி பெற்றுச்சென்ற அபுபக்கர் முழுத் தொகைக்கும் அரிசி வாங்கவேண்டியதாயிற்று. பின் நாட்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதாலேயே இந்த முடிவு. சக்திவேலுக்கும் மூன்று நாட்கள் இவருக்கான (அபுபக்கர்) சம்பளப் பிரச்னை இருக்காது.

நோட்டு பிரச்னைக்குப் பிறகு, கடந்த வாரத்திலிருந்தே இந்தியக் குடும்பங்கள் பெரும்பாலானவை கடன் அடிப்படையிலே சமையல் பொருட்களை வாங்குகின்றனர். ஆனால், அபுபக்கருக்கு கடனில் பொருட்களை வாங்குவதில் இஷ்டமில்லை. ’இதற்குமுன்னர் கடனுக்கு வாங்கியதில்லை என்றும் அதனால் மீண்டும் மீண்டும் அதிகமாக கடனுக்கு வாங்கத் தோன்றும்’ என்கிறார் அபுபக்கர். எனவே, ரேஷன் அரிசி வாங்கி சமைக்கத் தொடங்கிவிட்டார்; இவரது இரண்டு குழந்தைகளுக்கு அது பிடிக்காது என்றாலும்கூட.

ஈஸ்வரமூர்த்தி என்பவர் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு பின்னலாடைகளை சப்ளை செய்யும் டீலராக உள்ளார். சுமார் 20 ஊழியர்களைக்கொண்ட இவரது கூடத்தில் தற்போது வெறும் மூன்றுபேர் மட்டுமே பணிபுரிகின்றனர். மீதப்பேரை பணிக்கு வரவேண்டாம் என்று ஈஸ்வரமூர்த்தி கூறிவிட்டார். வங்கிகளில் நடப்புக் கணக்குகளில் ரூ.50,000 வரையில் பணம் எடுக்க வங்கிகள் அனுமதிப்பதில்லை என்பதால், தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாத நிலையில் அவர்களை நிறுத்திவிட்டதாக வருத்தம் தெரிவிக்கிறார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பானது தீபாவளிக்கு செய்த சப்ளைக்கான செட்டில்மெண்ட் தொகையைப் பெறும்நேரத்தில் வெளியானதால், அவர்களுக்கான செட்டில்மெண்ட் தொகை கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது. சப்ளையர்களுக்கு ரூ.49,000 வரையில் மட்டுமே பணம் செலுத்த முடிகிறது என்பதோடு, வங்கிகளுக்கு பல்வேறு ஆவணங்களுடன் செல்லவேண்டியதிலும் சிக்கல்கள் உள்ளன.

திருப்பூர் ஆடைத் தொழிலில் ஏற்றுமதி மிக முக்கியப் பங்காற்றுகிறது. ஏற்றுமதியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் சிறு ஏற்றுமதியாளர்களுக்கு ஆர்டர் வழங்குகின்றனர். எனவே, ஏற்றுமதி தொழிலில் பணப் பரிவர்த்தனை குறைவு என்றாலும், சிறு ஏற்றுமதியாளர்களுக்கு பணப் பரிவர்த்தனை அவசியமாகிறது. இதில் துணிகளுக்கு பட்டன் வைப்பது, ஆடைகளில் டிசைன் அச்சடிப்பு, பேக்கேஜிங் உள்ளிட்ட பிரிவுகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே, இந்த வேலைகளுக்கு பணத்தேவை இன்றியமையாதது.

திருப்பூர் ஆடைத் தொழிலில் நேரடியாக 4 லட்சம் மற்றும் மறைமுகமாக 4 லட்சம் என, சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 20 சதவிகிதப் பேர் அதாவது, 1.6 லட்சம் பேர் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனர். மேலும் 2000 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த சிறு நிறுவனங்களிலேயே அமைப்புசாரா தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நோட்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட தடையை பெரு வணிகர்களும் ஏற்றுமதியாளர்களும் ஆதரித்தனர். அவர்களுக்கு ரூ.7,000 கோடி வரையில் வங்கிப் பரிவர்த்தனைமூலமாக விற்றுமுதல் கிடைக்கிறது. ஆனால் ரூ.15,000 கோடி வரையில் மட்டுமே விற்றுமுதல் பெறும் சிறு நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஜகநாதன் என்பவர் 80 சதுர அடி அளவில் டி-சர்ட், டிராக் பேண்ட் உள்ளிட்ட துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவர், தினசரி ரூ.10,000 முதல் ரூ.30,000 வரையில் துணிகளை விற்று லாபம் பெறுகிறார். அந்தக் கடையில் பணிபுரிந்துவந்த ஒரே ஒரு ஊழியரையும் ஜகநாதன் நேற்று நிறுத்திவிட்டார். மேலும் மாலை 4 மணிக்கே கடையை மூடிவிட்டார். கடந்த புதன்கிழமை ஒரு துணிகூட விற்பனையாகவில்லை என்று அவர் கவலை தெரிவிக்கிறார்.

திருப்பூரின் மிகமுக்கிய ஆடைகளுக்கான மையமாக விளங்குவது காதர்பேட்டை. இங்கு மொத்த விலை, சில்லறை விலை, குடோன் உள்ளிட்ட 3,000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவையனைத்தும் பெரும்பாலும் பணப் பரிவர்த்தனை மூலமாக செயல்படுகின்றன. இங்கு ஆடைகள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. எப்போதும் பிஸியாக இருக்கும் காதர்பேட்டை, கடந்த ஒரு வாரமாகவே களையிழந்துள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தால் நிலைமை சரியாகிவிடும் என்பது காதர்பேட்டை வாசிகளின் எண்ணம். இந்த காதர்பேட்டையில் எப்போதுமே ஊழியர்களுக்கான தேவை அதிகமாக இருக்கும். இங்கு பணிபுரியும் ஊழியர்கள் பணமாகவே தங்களது ஊதியத்தைப் பெறுகின்றனர். எனவே, நோட்டுகள் மீதான தடை இந்த ஊழியர்களை பெருமளவில் பாதித்துள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் இந்த நோட்டுகளுக்கான தடை அறிவிப்பை ஜி.எஸ்.டி-யை செயல்படுத்துவதற்கான ஒரு முன்னேற்பாடாகவே கருதுகின்றனர். அனைத்து பணப் பரிமாற்றத்தையும் கணக்கில் கொண்டுவர முடியும் என்பது அவர்களது கருத்து. ஜி.எஸ்.டி. அமலானால் நிலைமை கட்டுக்குள் இருக்கும் என்கின்றனர். ஆனால் இதனால் சிறு வணிகர்களும், ஊழியர்களும் பாதிக்கப்படுவதை கருத்தில்கொள்ள வேண்டும். எனவே, ஊழியர்கள் அனைவரும் ஏற்றுமதிப் பிரிவுக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஆனால் சக்திவேல், வெங்கடாசலம் போன்றோர்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை. அவர்களது தொழிலை மட்டுமே அவர்கள் சார்ந்துள்ளனர். அல்லது அவர்கள் தங்களை ஒரு ஊழியராக மாற்றிக்கொண்டு சம்பளத்துக்குப் பணிபுரியலாம். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருப்பவர் விஜயகுமார். அவரது தந்தை, கடந்த 40 வருடங்களுக்குமுன்பு 10 எந்திரங்கள் மற்றும் 10 ஊழியர்களுடன் தொழில் தொடங்கினார். இன்று அவர், ஏற்றுமதி தொழிலை 1,500 ஊழியர்களுடன் செய்துவருகிறார். தற்போது நோட்டுகளுக்கு தடை விதித்திருப்பதுபோன்று விஜயகுமாரது தந்தையின் தொழில் தொடங்கிய காலத்தில் தடை விதித்திருந்தால் தனது தந்தையின் தொழில் அப்போதே முடங்கியிருக்கும் என்கிறார் விஜயகுமார்.

வெங்கடாசலம், சக்திவேல், அபுபக்கர், ஜகநாதன், ஈஸ்வரமூர்த்தி, விஜயகுமாரின் தந்தை போன்றவர்களே திருப்பூரின் பெயர்பெற்ற ஆடைத் தொழிலின் மூலப் பொருட்களாக உள்ளனர். நோட்டுகளுக்கு விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பூரின் சிறிய டெய்லர்கள் முதல் மிகப்பெரிய ஜவுளி ஏற்றுமதியாளர்கள் வரையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்பிரச்னை குறித்து ’சிஸ்மா' பொதுச் செயலாளர் பாபுஜி கூறுகையில், ”கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, மத்திய அரசு செயல்படுத்தும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது. முன்னேற்பாடுகளின்றி பழைய ரூபாய் நோட்டுகளை தடை செய்ததாலும், புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வருவதில் தாமதம் ஏற்படுவதாலும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குளிர்காலத்துக்காக தயாரிக்கப்பட்ட ஆடைகளை, வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடிவதில்லை. பணம் மாற்றுவதற்காக, தொழிலாளர்கள் பணிக்கு வராமல் வங்கிகளில் காத்திருக்கின்றனர். திருப்பூர், சிவகாசி போன்ற தொழில்நகரங்களில் மத்திய அரசு சிறப்பு ஆய்வுக்குழு அமைத்து, தொழில்துறையினரிடம் கருத்தை பெற்று, அதனடிப்படையில், பணப் பரிவர்த்தனைகளின் பிரச்னைகளைத் தளர்த்த வேண்டும். மத்திய அரசு, இப்பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வுகாண வேண்டும்” என்றார்.

நன்றி - தி இந்து

தமிழில் - நா.செந்தில் குமார்

சனி, 19 நவ 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon