மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 25 அக் 2016

முதல்வர் உடல் நிலை:விமர்சிப்பது தனி உரிமை அல்ல-உயர்நீதிமன்றம்!

முதல்வர் உடல் நிலை:விமர்சிப்பது தனி உரிமை அல்ல-உயர்நீதிமன்றம்!

தமிழக முதல்வர் உடல் நிலை தொடர்பாக விமர்சிப்பது தனிப்பட்ட உரிமை என்று கூற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல் நிலை தொடர்பாக வதந்தி பரப்பிய வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், திமுக பிரமுகரான நவநீதன் சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்“

'தி.மு.க.வின் கோவை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளராக பதவி வகிக்கிறேன். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் சமூக வலைதளம் மூலமாக பிரசாரம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளேன்.இந்நிலையில் கடந்த அக்டோபர் 11-ந்தேதி, முதல்-அமைச்சர் உடல் நலம் குறித்து எனக்கு ‘வாட்ஸ்அப்’ செயலி மூலமாக வந்த ஒரு பாடலை முகநூலில் பதிவு செய்தேன். அந்த பாடலில், தமிழக அரசின் தற்போதைய அரசியல் நிலவரம், முதல்அமைச்சரின் தற்போதைய நிலை குறித்து கருத்தை பதிவு செய்யும் வகையில் உருவான பாடல் அது . அந்தப்பதிவு என்னுடைய அசல் பதிவு அல்ல. வேறு ஒருவரிடமிருந்து வந்ததை நான் அப்படியே மற்றவர்களுக்கு அப்படியே பகிர்ந்தேன் அவ்வளவே.எதிர்கட்சியைச் சேர்ந்தவன் என்ற முறையில் ஆளுங்கட்சியை விமர்சிப்பது எங்களது கடமை. அதேநேரம், நான் முகநூலில் வெளியிட்ட பாடல் பதிவை மறுநாளே அழித்தும்விட்டேன். இந்நிலையில்,எதிர்க்கட்சி என்ற காழ்ப்புணர்ச்சியில் அ.தி.மு.க. நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் மகாலிங்க புரம் காவல்துறையினர் என் மீது வழக்குப்பதிவு செய்து என்னை கைது செய்யவும் என்னுடைய சமூக வலைதளங்களில் என்னுடைய பக்கங்களை முடக்கவும் முயற்சி செய்கின்றனர்.காவல்துறையினரின் இந்த செயல் சட்டதிற்கு புறம்பானது .எங்களின் அன்றாட பணிகளில் போலீசார் குறுக்கிடக்கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதி மன்ற நீதிபதி திரு.ராஜேந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி

'‘அரசியலமைப்பு சட்டம் ஒருவருக்கு கருத்து தெரிவிக்க உரிமை வழங்கியிருந்தாலும்,பொதுவெளியில் அவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்து, பிறரை பாதிக்காத வண்ணம் இருக்கவேண்டும்.ஒருவரது தனிப்பட்ட விஷயத்தை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. தமிழக முதல்வர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரது தனிப்பட்ட ஆரோக்கியம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்வதை தனிப்பட்ட உரிமை என்று கூற முடியாது’ என்று கூறி , வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவு பிறப்பித்தார்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon