மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 17 அக் 2019

‘சகிப்புத்தன்மையை இழந்தது இந்தியா‘ : ப.சிதம்பரம்!

‘சகிப்புத்தன்மையை இழந்தது இந்தியா‘ : ப.சிதம்பரம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மோடி அரசு சகிப்புத்தன்மையை இழந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் இன்று கொல்கத்தாவில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசும்போது, கடந்த நான்கு வருடகால மோடி ஆட்சியில் சகிப்புத்தன்மையின்மை வளர்ந்து நிற்கிறது என்று கூறினார். நம்மிடம் வேறுபட்ட பல கருத்துகள் இருந்தபோதும் மனிதநேயம் நிறைந்த சமூகமே வாழ்வைச் செழிக்க செய்யும் என்று வலியுறுத்தினார்.

சகிப்புத்தன்மை மிகுந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும்:

நாம் மனிதநேயமும், சகிப்புத்தன்மையும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இந்தியா வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஒரு சமூகத்தை இன்னொரு சமூகம் சகிக்க முடியவில்லையெனில், ஒரு ஜாதியை இன்னொரு ஜாதியை பொறுத்துக்கொள்ள முடியாது எனில் இந்தியா வளர முடியாது. கடந்த நான்கு வருடங்களில் சகிப்புத்தன்மையின்மை இந்தியாவில் வளர்ந்தோங்கி நிற்கிறது. இதை உடனே தடுத்து நிறுத்தவில்லையெனில், இந்தியாவின் பின்னடைவையும் தடுக்க முடியாது. நம்மிடையே கருத்து மோதல்கள் இருந்தபோதும் திறந்த மனதுள்ள சமுதாயம் இங்குள்ளது என்று நான் நம்புகிறேன். அதேபோல் திறந்த மனதுள்ள ஆட்சியமைப்பு ஒரு நாட்டின் செழிப்புக்கு உத்தரவாதம்” என்று கூறினார்.

மேலும் இந்தியாவின் 25 ஆண்டுகால பொருளாதார தாராளமயமாக்கலை குறித்து பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர், நாட்டின் சமத்துவமின்மை குறைக்கவேண்டியதன் அவசியம்பற்றி வலியுறுத்தினார். “கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பெரும்பாலான சமத்துவமின்மை இங்கே அதிகரித்துள்ளது. அது இந்தியாவுக்கு நன்மைபயப்பதாக இல்லை என்பதை மறுக்கமாட்டீர்கள். இந்த சமத்துவமின்மையைக் குறைக்க ஒரு வழி இந்திய குடிமகனின் அடிப்படை ஊதியத்தை உயர்த்துவதுதான். இத்தகைய ஏற்றத்தாழ்வு, ஜனநாயகத்துக்கு எதிரான ஒன்றாகும். கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூகத்துக்குத் தேவையான துறைகளில் செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளது கவலையளிப்பதாக உள்ளது. எனவே, பொது செலவினத்தை சீர்திருத்தவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அடிப்படை சுகாதார மற்றும் கல்வியை கேட்கும் அவனுக்கு கிட்டாத நிலையே இங்குள்ளது” என்று வருந்தினார்.

தொடர் அன்னிய முதலீடு அவசியம்:

இந்தியாவில் தொடர்ச்சியாக வெளிநாட்டு முதலீட்டைக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். வெளிநாட்டு முதலீடுகள் வெறுப்பவர் இங்கே இடமில்லை. வளரும் பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சியடைய அன்னிய முதலீடு அவசியமாகிறது. அதேநேரம், மிதமான பணவீக்க அளவை சமாளிக்க வேண்டும். ரிசர்வ் வங்கி நிதி மற்றும் வளர்ச்சியில் சமநிலையைப் பேணவேண்டியது அவசியம் என்று பேசினார் சிதம்பரம்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon