மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 22 ஜன 2020

திருப்பூரில் உலகத் திரைப்பட விழா!

திருப்பூரில் உலகத் திரைப்பட விழா!

தமிழகத்தில் மாற்று சினிமா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், திரைப்பட சங்கங்கள் போன்றவை உலக சினிமாக்கள் குறித்து பேசுவதும் சிறு பத்திரிகைகளில் எழுதுவதும் ஆங்காங்கே திரையிடல்கள் நடத்துவதையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றன.

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துவிட்ட இந்தச் சூழலில் குறும்படங்கள், ஆவணப்படங்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது.

அந்தந்த பகுதிகளில் இருக்கும் திரைப்பட சங்கங்கள் அந்தப் படங்களை திரையிட்டு விவாதிக்கும் சூழல் தற்போது தமிழகத்தில் நிலவுகிறது.

இதன் அடுத்தகட்டமாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக உலகத் திரைப்படங்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும்விதமாக “5வது உலகத் திரைப்பட விழா, திருப்பூர், டைமண்ட் திரையரங்கில் வருகிற நவம்பர் 18 முதல் 22 வரை நடைபெற உள்ளது. ஐந்து நாள்கள் நடக்கும் இந்த விழாவில் பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 25 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

உலகத் திரைப்பட விழாக்கள் என்றால் கோவா, திருவனந்தபுரம், டில்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் நிகழக்கூடிய சினிமா, இலக்கிய அறிவுஜீவிகளுக்கானது என்ற பிம்பத்தை த.மு.எ.க.ச எளிமையாக உடைத்து கம்பம், திருப்பூர் போன்ற சிறு நகரங்களில் எல்லாம் உலகத் திரைப்பட விழாக்களை நடத்தி பாமர மக்களையும் பங்குபெறச் செய்கிறது.

அரசியல் கட்சியின் மாநாட்டுக்கு சுவர் எழுத்து விளம்பரத்தைப் பார்த்திருப்போம். ஆனால் திருப்பூரில் உலகத் திரைப்பட விழாவுக்கான சுவர் எழுத்து விளம்பரத்தைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதுபோன்ற திரையிடல்கள் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் நிகழும்போது ஒரு நல்ல ரசனை மாற்றம் தமிழகத்தில் ஏற்படும் எனும் நம்பிக்கை பிறக்கிறது. இதனால், கடந்த நூறாண்டுகளில் தமிழ் சினிமாவில் ஏற்படாத மாற்றம், அடுத்த பத்தாண்டுகளுக்குள் மிகப் பெரியளவில் நிகழும் என்பதில் சந்தேகமில்லை.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon