மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

மாணவரை கண்டுபிடித்தால் ஒரு லட்சம்!

மாணவரை கண்டுபிடித்தால் ஒரு லட்சம்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலிருந்து காணாமல்போன மாணவர் நஜீப் அகமதுவைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என டெல்லி காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த நஜீப் அகமது, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயோ டெக்னாலஜி பயின்று வருகிறார். இவர், பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்திருக்கும் மஹி - மாந்தவி விடுதியில் தங்கிவந்துள்ளார். இவர், அகில இந்திய மாணவர் சங்கத்தின் உறுப்பினர் என்றும், இவரை ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பல்கலைக்கழக விடுதி தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக, இரு குழுவைச் சேர்ந்த மாணவர்களிடையே தகராறு நிலவிவருவதாகவும் இதில், தாக்குதலுக்குள்ளான நஜீப் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி காலை 11 மணி முதல் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், காணாமல் போன மாணவரைக் கண்டுபிடிக்க பல்கலைக்கழகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அவருடைய தாய்க்கு இதுகுறித்து சரியான பதிலளிக்கவில்லை என்றும் அவரோடு பயின்ற சக மாணவர்கள் பல்கலை வளாகத்தில் பேராசிரியர்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. முதலில் நஜீப் அகமது குறித்து தகவல் தருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என காவல்துறையினர் முதலில் அறிவித்திருந்தனர். தற்போது, தேடுதலை தீவிரப்படுத்தும்வகையில் அவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon