மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 அக் 2019

நிலக்கரி இறக்குமதி! நிறுத்தும் தமிழக மின் வாரியம்!

நிலக்கரி இறக்குமதி! நிறுத்தும் தமிழக மின் வாரியம்!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதை நிறுத்தியதுபோல, நிலக்கரி இறக்குமதியையும் நிறுத்தவும் தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழக மின் வாரியத்துக்கு 4,660 மெகாவாட் திறனுடைய ஆறு அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு, 2.75 கோடி டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதில், 2.35 கோடி டன் பொதுத்துறையைச் சேர்ந்த ‘கோல் இந்தியா’ நிறுவனத்தின் ஒடிசா, மேற்குவங்க மாநிலச் சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது.

மீதியை, தனியார் நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து மின் வாரியம் இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்யும்போது, சர்வதேச சந்தையில் ஒரு டன் நிலக்கரி ரூ.4,000-க்கு கிடைத்தபோதும், மின் வாரியம் ரூ.5,400-க்கு வாங்கியது. இதனால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, 2015 முதல் சந்தை விலைக்கு நிலக்கரி வாங்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தற்போது, ஒரு டன் ரூ.3,700-க்கு வாங்கப்படுகிறது. இந்நிலையில், வெளிநாடுகளின் நிலக்கரி இறக்குமதியை நிறுத்தி கோல் இந்தியாவின் சுரங்கங்களில் இருந்து மட்டும் வாங்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: “நிலக்கரி இறக்குமதிக்காக ஆண்டுதோறும், ரூபாய் 5,000 கோடியை மின் வாரியம் செலவு செய்கிறது. நிலக்கரி வாங்க டெண்டர் விடும்போது குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் பங்கேற்று அதிக விலைப்புள்ளி கொடுக்கின்றன. அரசியல் சிபாரிசு இருப்பதால் பேச்சு நடத்தியும், பெரிய அளவுக்கு விலையைக் குறைப்பதில்லை. எனவே, தனியாரிடம் நிலக்கரி வாங்குவதைத் தவிர்த்து, கோல் இந்தியாவின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon